சனி, 2 ஜனவரி, 2010

முஹர்ரம் மாதம்

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தில் முதல் மாதம் என்ற வகையில் மகிழ்ச்சிக்குரிய மாதமாக அமைந்துள்ளது. ஆயினும், வரலாற்றில் மிகப்பெரும் கொடுமையாக வர்ணிக்கப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் படுகொலை இடம்பெற்ற மாதம் என்ற வகையில் அது மிகத் துக்ககரமான ஒரு மாதமாகும்.
நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்கள் உறவினர்களும் உமையா ஆட்சியாளரான யஸீதினால் கர்பலாத் திடலில் கொமூரமாகக் கொi செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு.
வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிக் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைனின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியன.
இமாம் ஹுஸைன் (அலை), சிறந்த சிந்தனையுடையோராயும் துன்பங்களையும் ஆபத்துக்களையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மன உறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை.
வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தர்கள். ஆனாலும், நிராயிதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாக கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக் களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப்போனார்கள்.
கர்பலாத் திடலில் இமாம் ஹுஸைன் அவர்கள், தமது உறவினர்கள் நண்பர்கள் சகிதம் பரிதாகமாக இறந்து போனார்கள் என்பதும் , அவர்களது முயற்சி உடனடி வெற்றி பெறவில்லை என்பதும் உண்மையே. ஆனால், பெரும் ஆயதங்களும் இராணுவப் படையணியும் கொண்டு இறுமாப்புடன் நிற்கின்ற ஆட்சியாளர் யஸீதை வீழ்த்திவிட முடியும் என்ற எண்ணத்தோடு இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் போராட்டத்தில் குதிக்கவில்லை. அவர்களது முயற்சி , உடனடிப் பிரதிபலனை எதிர்பார்க்க முடியாத நீண்டகால திட்டமாக அமைந்திருந்தது.
ஏனெனில், கர்பலாவின் துன்பியல் சம்பவம், தொடர்ந்து வந்த முஸ்லிம் உலகில் ஏற்படுத்திய பிரதிபலிப்புகளும் , முஸ்லிம்களுக்கு சாதகமான தாக்கங்களும் மிக அதிகமாகும். பிற்பட்ட இஸ்லாமியப் புரட்சிகளினதும் எழுச்சிகளினதும் அடித்தளமாய் அது அமைந்திருந்ததே அதன் யதார்த்த பூர்வமான பரிமாணமாகும். வலுமிக்க போர் உத்திகளுக்கான அடிப்படை தத்துவங்கள் கர்பலா நிகழ்ச்சியில் அதிகம் காணப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு இடையே உள்ள ஐக்கியத்துக்கான மூலாதாரங்கள் , இஸ்லாமிய நெறியிற் செல்வோரின் எழுச்சியிலே பின்னிப் பிணைந்துள்ளன.
ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாத்தின் பாதுகாப்புக்கு முஸ்லிம் உலகுக்குள் இருந்தே அச்சுறுத்தல் தோன்றியதுடன், இஸ்லாத்தின் பாதுகாப்புக்கு முஸ்லிம் அல்லாதவர்களை விட , உமையாக் கலீபாக்களின் கொடுங்கோலாட்சியே சவாலாக அமைந்துவிட்டது.
அக்காலத்தில் நிலவி வந்த மார்க்க விரோதச் சூழ்நிலையில், நபி (ஸல்) அவர்களினால் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் நேர்மை, நற்குணம், நல்லொழுக்கங்கள் இல்லாதிருப்பின் இஸ்லாம் கருத்தில்லாத ஒன்றாக வீழ்ச்சியடைந்திருக்கும். இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வீர உயிர்த்தியாகமும் அவர்களது குடும்ப உறுப்பினர், மற்றும் தோழர்களின் வீரத்தியாகங்களும் இன்றேல் இஸ்லாம் நலிவுற்றிருக்கும். முஸ்லிம் உலகும் அவ்வேளையில் அறநெறி , பொருளாதாரம் , அரசியல் ஆகியவற்றிலே வீழ்ச்சி கண்டிருந்தது. மேலும் ஐக்கியமின்மை எனும் நோய்க்கிருமிகள் உலக விவகாரங்களின் மீது படிந்து, முஸ்லிம் உலகை மேலும் வலுவிழக்கச் செய்திருந்தன. அவை , நபி (ஸல்) அவர்களின் நெறிமுறையை கலப்படமின்றிப் பின்பற்றுவொர் மீதும் , இஸ்லாத்தைத் துலங்கச் செய்யும் அவர்களின் நோக்கங்கள், குறிக்கோள்கள் மீதும் காரணமற்ற வெறுப்பையும் பகைமையையும் தூண்டிவிட்டிருந்தன.
முஸ்லிம் உலகுக்குள்ளேயே எழுந்த யுத்தமும் , பொருளாதார , அரசியல் இரானுவத் தடைகளும் எப்படியாயினும் இஸ்லாத்துக்கு எதிராக எழுந்த செயற்பாடுகளாகும். அநேகமான முஸ்லிம் அரசாங்கத் தலைவர்கள், தற்காலிக பொருளாதார நெருக்கடிகள் தம்மீது திணிக்கப்படலாம் என்ற பளத்தினால் , இஸ்லாத்தின் எதிரிகளுடன் ஒன்றுசெர்ந்து ஐக்கியப்பட்டு இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
இறைவன் நாட்டத்தை நிறைவேற்றி வைப்பதிலே எடுக்கப்படும் நடவடிக்கைகள், நபி (ஸல்) அவர்களின் எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து இஸ்லாமியப் புனர்நிர்மாணப் பணியில் ஈடுபடும் மனவுறுதி, முஸ்லிம் உலகுக்குள்ளே எதிர்கால மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளல் , கலீபாக்களின் கொடுங்கோலாட்சி படர விடாமல் தடுக்கும் மனோதிடம் ஆகியவை அன்று ஆழமாகவும் அவசரமாகவும் தேவையாயிருந்த அம்சங்களாகும். தலைமைத்துவத்திற்கு ஏற்ற சிறந்த தொலைநோக்கும் அறிவும் மிகுந்தவர்கள் அன்று வாழ்ந்தார்கள். இஸ்லாமும் அதே பகைமைக்கும் எதிர்ப்புகளுக்கும் ஊடாக வளரவேண்டியிருந்தது.
நபி (ஸல்) அவர்கள், மூடக் கொள்கைகளை வேரோடு களைந்து, இஸ்லாம் என்ற விழிப்புணர்ச்சியை மக்களிடையே தோற்றுவித்தார்கள். அம் முயற்சியில் பல்வேறு இழப்புகளுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இத்தகையதொரு சூழ்நிலை நபியவர்களுக்குப் பிற்பட்ட காலத்திலும் தோன்றியது. எனவே , இமாம் ஹுஸைன் அவர்கள் , தமது பாட்டனார் மேற்கொண்ட அதே சமூகப் புனரமைப்புப் பணியை மேற் கொண்டார்கள். அம்முயற்சியில் பல்வேறு இழப்புகளுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுத்தார்கள். இறுதியில் தமது இன்னுயிரையும் அர்ப்பணித்தார்கள். அவர்களது முயற்சி பிற்காலத்தில் பெரும் எழுச்சிகளுக்கும் மறுமலர்ச்சித் தேடல்களுக்கும் வித்திட்ட வகையில் பாரிய வெற்றியை ஈட்டிக் கொண்டது. இவ்வகையில் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் ஒரு பெரும் வெற்றி வீரராய்த் திகழ்கின்றார்கள்.
முஹர்ரம் மாதம் பத்தாம் நாளான ஆஷுரா நாள், இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள் நினைவு கூறப்படும் நாளாகும். அன்றுதான், இமாம் அவர்கள் உணவோ குடிப்போ இன்றி முற்றுகையிட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்கள். பட்டினியிலும் கவலையிலும் வாடினார்கள். தற்காப்புக்காகப் போராடி உயிர் நீத்தார்கள். உடலில் இருந்து தலை வேறாக்கப்பட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டார்கள். இத்தகைய சோக நாளை நினைவு கூர்ந்து , இஸ்லாத்தைப் பாதுகாக்கப் போராடிய இமாம் ஹுஸைனுக்;கு நன்றி தெரிவிக்கும் கடமை உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தமது உயிரையும் அர்ப்பணித்துப் போராடிய இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் போராட்ட உணர்வலைகள் உலக மக்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. எனவே, அந்த உணர்வலைகளை வெறும் அரசியல் எல்லைக்குள்ளிட்டுக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளைப் புறந்தள்ளி , அதன் தத்துவங்களையும் சிறப்புகளையும் உணர்ந்து செயலாற்ற நாம் முனைய வேண்டும். இமாம் ஹுஸைனிற்கான பிரதியுபகாரமாய் அது அமையலாம்.