வெள்ளி, 15 ஜனவரி, 2010

அஹ்லுல் பைத்தின் சிறப்புகள்

ஓ..அஹ்லுல் பைத்தினரே உங்களை விட்டு அசுத்தங்களை நீக்கி வைக்கவும் உங்களை (ப்பாவங்களை விட்டு) முற்றுமுழுதாக தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான். அல்குர்ஆன் 33:33
..(நபியே) நீர் கூறும் உறவினர்கள் (குர்பா) மீது அன்பு கொள்வதைத் தவிர இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை.. அல்குர்ஆன் 42:23
நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். ஒன்று அல்லாஹ்வின் வேதம் இரண்டாவது எனது அஹ்லுல்பைத் (குடும்பம்). இவ்விரண்டையும் நீங்கள் கைக்கொள்ளும் வரை என்றுமே வழிதவற மாட்டீர்கள். (நிச்சயமாக) ஹவ்லுல் கவ்ஸரில் என்னிடம் வரும் வரை அவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மாட்டாது என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சொன்னார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால்.. அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மத்ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும் அன்னவர்களின் அருமைக் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் அருளும்; பொழிவதாக!
சர்வ வல்லமை பொருந்திய இரட்சகனான அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா மானுட வர்க்கத்தினர் நேர்வழியில் நடந்து ஈருலகிலும் ஈடேற்றம் பெருவதற்காய் ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வரை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான். அவர்கள் யாவரும் அல்லாஹ்வின் தூதை மானுடர் முன் எத்திவைத்து அவர்களை நேர்வழியின் பால் அழைத்தனர். இந்தத் தூய இறைபணியில் அன்னவர்கள் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி மக்களை நேர்வழிப்பத்தினர்.
இறை தூதர்களின் தொடரில் இறுதியாக வந்தவர்கள் எமது நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களாவர். இறை தூதை நிறைவு செய்து இறைதூதர்களின் இறுதியாளராய் அவர்களின் முத்திரையாய் வந்தவர்கள் எங்கள் நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள்.
ஐயாமுல் ஜாஹிலிகள் என்ற நாகரீகம் அடையாத காட்டு மிராண்டிகளான அராபியர்களிடம் இறைதூதை முன் வைக்கும் சிரமமான பணியில் தமது இன்னுயிரையும் துச்சமென மதித்து ஈடுபட்டார்கள் எங்கள் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள். அனாதையாக ஏழையாக இடையனாக வர்த்தகராக வாழ்ந்த அவர்கள் இறை தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சகிப்புத் தன்மை, தன்னலங்கருதாமை, அர்ப்பண மனப்பாங்கு என்பவற்றை அணிpகலனாய்க் கொண்டு பணி புரிந்தார்கள் அவர்கள். எதிரிகளின் இன்னல்களை மன அமைதியுடன் சகித்துக் கொண்டார்கள், பட்டினியை பரிவுடன் அனுபவித்தார்கள். கொலை வெறிகொண்ட எதிரிகளின் முன்னிலையிலும் நிலைதளராது பொறுமையுடன் தஃவத் பணி புரிந்தார்கள்.
இதனால் வாழ்வில் ஏற்றங்கள் பல அவர்களை நாடி வந்தன, உயர்வுகள் தேடி வந்தன, அனாதையாய்ப் பிறந்த அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இறுதியில் அந்த அரபு நாட்டின் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராய் மாரினார்கள்.
இன்பத்திலும், துன்பத்திலும் ஏற்றத்திலும், இரக்கத்திலும் உறுதியாய் நின்ற அவர்களுக்கு உதவியாய் நின்றது அன்னவரின் குடும்பம். அது அஹ்லுல் பைத் எனப்படும் அண்ணலாரின் அருமைக்குடும்பம்.
அருமை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தூய்மையானவர்கள். இறைவனால் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். அன்னவர்களின் முன்னோர்கள் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய தூய்மையாளர்கள்.
அது போல் ரஸுலுல்லாஹ ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வாரிசுகளான அஹ்லுல் பைத்தினர் அனைவரும் தூய்மையாளர்கள் தூய இஸ்லாத்தைப் போதிக்க வந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தூயவர்களாகவே இருந்தார்கள். அதுபோல் அவர்களின் வீட்டாரும் தூயவர்களாகவே இருந்தார்கள்.
ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வாழ்க்கை முறையை அப்பழுக்கின்றி அச்சொட்டாகப் பின் பற்றி வாழ்ந்தவர்கள் அஹ்லுல் பைத்தினர். மேலும் அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி ஒவ்வொரு செயலிலும் உதவியாளர்களாய் அஹ்லுல் பைத்தினர் வாழ்ந்தார்கள்.
இப்படியான உயர்வுகளை தம்மகத்தே கொண்டுள்ள அஹ்லுல் பைத்தினரின் சிறப்புக்கள் பற்றி சுருக்கமான ஓர் அறிமுக நூலாக இது அமைகின்றது.
அறிமுகம்
வல்ல அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா உலக மாந்தரை நேர்வழிப்படுத்த நெறிப்படுத்த காலத்துக் காலம் நபிமார்களையும், ரஸுல்மார்களையும் அனுப்பினான். தூய்மை பொருந்திய அந்த நபிமார்கள், ரஸுல்மார்களில் எல்லாம் எமது நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் உயர்ந்தவர்கள் உன்னதமானவர்கள் அதிலும் ஏனைய இறைத்தூதர்களை போலன்றி இவர்கள் ஒரு சமூகத்திற்காக அல்லது ஒரு நாட்டினர்க்காக வந்தவர்களல்லர். மாறாக ரஹ்மதுல்ஆலமீன் என்று இறைவனாலேயே போற்றப்பட்ட அகிலத்திற் கெல்லாமே ஓர் அருட்கொடையாக அமைந்தார்கள்.
அந்த உயர்ந்த இறை தூதர்களின் முத்திரையான எங்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பரிசுத்த குடும்பத்தினரே அஹ்லுல் பைத் என அழைக்கப்படும் (நபியவர்களின்) வீட்டார்கள் அல்லது குடும்பத்தவர்கள் ஆகும்.
அஹ்லுல் பைத்தினர் உயர்வு பெற்றவர்கள், தூய்மையானவர்கள். அவர்கள் மீது உலக மாந்தர் அனைவருமே அன்பு கொண்டுளளனர். நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் இறை தூதை விசுவாசிக்கும் யாவரும் அன்னவர்களின் அடியொறறி வாழ்ந்த அஹ்லுல் பைத்தினர் மீது நேசம் கொண்டவர்களே. அவர்களின் சீரான வழிகாட்டலைப் பின்பற்றியே வாழ்கின்றனர்.
இஸ்லாம் எனும் தொடுவானில் தோன்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள் அஹ்லுல் பைத்தினர். ஆஹ்லுல் பைத்தினரை அல்லாஹ் சுபுஹானஹு தஆலா தனது புனித மறையில் புகழ்ந்துரைக்கின்றான்.
ஓ அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டு (சகல) அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்று முழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்பகிறான். அல் குர்ஆன் 33:33
இந்த திருவசனம் தொடர்ச்சியான தெய்வீக வழிகாட்டலின் ஒரு வெளிப்பாடேயாகும். நேர்வழி காட்டக் கூடிய தூய்மையான ஒரு கூட்டத்தினர் மீது உலக முஸ்லிம்களின் கவனத்தை செலுத்தவே அல்லாஹ் இதன் மூலம் அஹ்லுல்பைத்தினரின் அப்பழுக்கற்ற தூய்மை தெளிவாகின்றது. அவர்களின் மாசற்ற குணவியல்பு இதன் மூலம் கோடிட்டு காட்டப்படுகின்றது. முஸ்லிம் உம்மத்தினரை வழி நடாத்திச் செல்லக் கூடிய முன்னணி வீரர்கள் அஹ்லுல் பைத்தினரே என்று இத்திருவசனம் பறை சாற்றுகின்றது.
இஸ்லாமிய கலாசாரத்திலும், இஸ்லாமிய வரலாற்றிலும் பல செய்மையாக்கள்கல் இடம் பெற்றதன் அடிப்படைக் காரணி இத்திருவசனம் இஸ்லிம்களிடம் ஏற்படுத்திய தாக்கமே. இந்த விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் யாவருமே ஒரே கருத்தையே கொண்டுள்ளனர். அல்லாஹ்வின் நேர்வழியை எமக்குப் போதித்த ரஸுல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் அஹ்லுல் பைத்தினரின் வழிகாட்டுதல் எமக்குக் கிடைத்தது. அல்லாஹ் உலக மாந்தரை எப்போதுமே வழிகாட்டுதல் இன்றி விட்டுவிடவில்லை. அஹ்லுல் பைத்தினரை வழிகாட்டிகளாகத் தந்து எம்மை இரட்சித்துள்ளான்.
எங்கள் ரஸுல் முகம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின் உலக மாந்தர் அனைவரையும் விட அந்தஸ்தில் உயர்ந்தவர்களாய் அஹ்லுல் பைத்தினர் உள்ளனர். அஹ்லுல் பைத் எனப்படுவது அருள்பெற்ற ஒரு மரம் என்றே அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.
ரஸுல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் உயர்வும், கீர்த்தியும், கௌரவமும் மதிக்கப்படுவது போல அஹ்லுல் பைத்தினரின் கௌரவமும் அறிஞர்களால் போற்றிப் புகழப்படுகின்றது.
அல்லாஹ் மீது, அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும், அவர்களின் அஹ்லுல் பைத்தினர் மீதும் வைக்கும் நேசத்தின் மீதே எமது விசுவாசம் தங்கியுள்ளது.
அஹ்லுல் பைத் எனப்படுவோர் அல்லாஹ்வினால் முற்று முழுதாக தூய்மைப்படுத்தப்பட்டவர்கள். அவன் மீது பரிபூரண விசுவாசம் கொண்ட நல்லடியார்கள். வழிகாட்டலுக்கு தகுதியானவர்களாய் முத்திரை குத்தப்பட்டவர்கள்.
அஹ்லுல் பைத் எனப்படுவோர் அருமை ரஸுல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் நேரடி வழிகாட்டலிலேயே வாழ்ந்தார்கள். அதனாலேயே அவர்களின் சொல்லும் செயலும் இறைவழியில் பின்னிப் பிணைந்திருந்தன.
அஹ்லுல் பைத்தினரான ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம், ஹஸரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் ,ஹஸரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகியோர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினால் வளர்க்கப்பட்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்தினான்.
அஹ்லுல் பைத்தினர் மீது அன்புசெலுத்துவதை அல்லாஹ் கட்டாயப்படுத்தி உள்ளான். இது பற்றிய பல திருவசனங்கள் அல்குர்ஆனில் வந்திருக்கின்றன. அஹ்லுல் பைத்தினர் தூய்மை நிறைந்த தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த உம்மத்தினை வழிநடத்தும் உயரிய தகுதியினைக் கொண்ட உதாரணப் பிறப்புகளாகும்;. நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் அஹ்லுல் பைத்தினரின் சீரிய வழிகாட்டுதலில் வாழ எமக்கு அல்லாஹ் தௌபீக் புரிவானாக.
உலகளாவிய இஸ்லாமியத் தூதை எடுத்துச் செல்வதிலும், உலகில் தீன் கொடியை நிலை நாட்டுவதிலும் அஹ்லுல் பைத்தினரின் சீரிய தலைமைத்துவப் பண்புகளும் வழிகாட்டல்களும் அளப்பரிய இடத்தை வகிக்கின்றன.
அல் குர்ஆனின் ஒளியில் அஹ்லுல் பைத்
வல்ல இறையோனாகிய அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு வஹீ மூலம் இறக்கியதே அல்குர்ஆன். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களைத் தூய்மைப் படுத்திய அல்லாஹ் தனது வழிகாட்டுதலை கொண்டு செல்லக் கூடிய தெய்வீகப் பணியினை அன்னவர்கள் மீது சாட்டி வைத்தான்.
அல்குர்ஆன் இறைவழிகாட்டுதலின் இன்ப ஊற்று. இறையாட்சியின் சட்டங்கள், திட்டங்கள் நிறைந்த கருவூலம் அது. மானுடப் பன்புகளை விளக்கும் அறநூல் அது. கடந்த காலச்சரித்திரத்தை படிப்பினையாகக் கூறும் வரலாற்றுப் பொக்கிசம். மோட்சத்தை வழங்கும் ஞானபீடம்;.
அல்குர்ஆன் மானுட வாழ்வின் அனைத்திலுமே சீரிய வழிகாட்டுதலை வழங்குகிறது. எங்கும் எவர்க்கும் எப்போதும் பொருந்தக்கூடிய முன்பின் முரணற்ற வசனங்கள் அதன் சிறப்பம்சமாகும்.
எதனை எவற்றை, எப்படி மக்கள் அடியொற்றி வாழ வேண்டும் என்பதனைத் தெளிவாக அவ்குர்ஆன் கற்றுத்தருகின்றது. அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்குர்ஆனை அச்சொட்டாபகப் பின்பற்றி அதன்படியே முற்று முழுதாக வாழ்ந்தார்கள். அவர்களின் சீரிய தலைமைத்துவத்தினாலும், போதனைகளாலும் இருள் சூழ்ந்திருந்த அராபியாவும், அதனைச்சூழவுள்ள பிரதேசங்களும் ஒளி பெற்றன. மாக்களாய் வாழ்ந்தோர் நன் மக்களாய் மாறினர்.
அல்குர்ஆன் அஹ்லுல் பைத்தினர் பற்றியும் அவர்தம் தூய்மை பற்றியும் அவர் மீது நேசம் கொள்ளல் பற்றியும் அவர்களின் வழிகாட்டுதலில் வாழ வேண்டிய கடமை பற்றியும் பல இடங்களில் எடுத்து இயம்புகின்றது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல திருவசனங்கள் அஹ்லுல் பைத்தினரின் உயர்வுகளைப் பறைசாற்றுகின்றன. மறைமுகமான திருவசனங்களுக்கு மானபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் விழக்கம் ஈந்துள்ளார்கள்.
தத்ஹீர்-தூய்மை
ஓ.. அஹ்லுல் பைத்தினரே ! உங்களை விட்டும் (சகல) அசுத்தங்களையும் விட்டும் நீக்கி உங்களை முற்று முழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான். அல் குர்ஆன் 33:33
ஆயத்துத் தத்ஹிர் என்னும் இந்த இறை வசனம் அல் குர்ஆனின் சூரத்துல் அஹ்ஸாபில் வருகின்றது. அல்லாஹ் தமது தூதர்கள் அனைவரினதும் சகல அசுத்தங்களையும் நீக்கி அவர்களை முற்று முழுதாகவே தூய்மை யாக்கியுள்ளான். அதே வழியில் இறை தூதர்களுக்கெல்லாம் முத்திரையாகவும் அகிலத்தின் அருட் கொடையாகவும் வந்துதித்த வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களையும் அவர்களின் புண்ணிய குடும்பத்தினரையும் அல்லாஹ் முற்று முழுதாகவே தூய்மைப் படுத்தியுள்ளான்.
போர்வைக்குரியர்கள்
ஒரு முறை ஹஸரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது அருமை மனைவியாகிய உம்மு ஸல்மா நாயகி (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே அருமை மகளார் ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் வந்தார்கள். ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்களை நோக்கி மகளே! உங்கள் கணவரையும், புதல்வர்களையும் அழைத்து வாருங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். அதன் படியே ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் தமது அருமைக் கணவரையும் தம்மிருமைந்தர்களையும் அழைத்து வந்தார்கள் அப்போது நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் எமனில் செய்யப்பட்ட ஒரு போர்வையினால் தம்மையும் ஹஸரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம் ஹஸரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் ஹஸரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நால்வரையும் போர்த்தினார்கள். போர்த்திய பின் தமது திருக்கரங்களை உயர்த்தியவர்களாக
வல்ல நாயனே! இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர்(அஹ்லுல் பைத்). இப்றாஹீமின் குடும்பத்தினர் மீது பரகத்தையும், ஸலவாத்தையும் சொரிந்தது போல் இந்த முஹம்மதின் குடும்பத்தினர் மீதும் பரக்கத்தையும், ஸலவாத்தையும் சொரிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்குரியவன்;;;, கீர்த்தி மிக்கவன், என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
இந்த ஹதீதினை அறிவிக்கும் உம்மு ஸல்மா நாயகி (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-
இந்த பிரார்த்தனையைக் கேட்டபோது நானும் அந்த போர்வையை உயர்த்தி புகுந்து கொள்ள முனைந்தவளாக நான் (இதில்) இல்லையா? என்று நபிகளாரை வினவினேன். அதற்கு நபிகளார் இல்லை. (ஆனால்) நீங்கள் நன்மையிலேயே இருக்கிறீர்கள் என்று கூறி போர்வையுள் புகவிடாமல்
என்னைத் தடுத்தார்கள்.
இந்த சம்பவம் நடந்த உடனேயே ஆயத்துத் தத்ஹீர் என்ற மேற்படி திருவசனம் அருளப்பட்டது.
ஓ..அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டும் (சகல) அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்று முழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகிறான்.(அறிவிப்பாளர்- உம்மு ஸல்மா (ரலி) நூல்- திர்மிதி- தபரானிp)
மேற்படி சம்பவம் சிற்சில மாறுதல்களுடன் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது. அல்குர்ஆன் விரிவுரையாளர்களும், அல்-ஹதீஸ் ஆய்வாளர்களும் இந்தச்சம்பவத்தையும், இதன் பின்னால் அருளப்பட்ட திருவசனத்தையும் உறுதிப்படுத்துகின்றார்கள். இதேபோல் ஒரு சம்பவத்தை நபிகளாரின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா (ரலி) அவர்களும் அறிவிக்கின்றார்கள்.
ஒரு முறை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி தம்மை ஒரு கறுப்பு நிறப் போர்வையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். சிறுது நேரத்தில் அங்கே ஹஸ்ரத் ஹஸன் வந்தார்கள். அவர்களையும் போர்வையால் நபிகளார் போர்த்தினார்கள். அதன் பின்னால் ஹஸ்ரத் ஹுஸைன்; வந்தார்கள். அவர்களும் போர்வையால் போர்த்தப்பட்டார்கள். அதன் பின்னால் ஹஸ்ரத் பாத்திமா வந்தார்கள். அவர்களும் போர்வையால் போர்த்தப்பட்டார்கள். இறுதியாக ஹஸ்ரத் அலி வந்தார்கள். அவர்களும் போர்வையால் போர்த்தப்பட்டார்கள்.
பின்னர், இவர்கள் எனது குடும்பத்தினர். இவர்கள் மீது அருள் புரிவாயாக என்று நபிகளார் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது இந்தத் திருவசனம் அருளப்பட்டது. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூற்கள்: கயாத் அல் மராம், தப்ஸீர் அல் கஷ்ஷாப்;)
இவர்கள் முஹம்மதின் குடும்பத்தினர். இவர்களை அசுத்தங்களை விட்டும் நீ தூய்மைப் படுத்துவாயாக என்று நபிகளார் பிரார்த்தனை புரிந்ததாக இன்னும் ஒரு ஹதீது வருகின்றது.
மேற்படி சம்பவமும், அல்குர்ஆனின் ஆயத்துத் தத்ஹீர் என்ற திருவசனமும் அஹ்லுல் பைத்தினரின் மேன்மையைப் பறை சாற்றுவதுடன் அவர்கள் யார், யார் என்பதையும் தெட்டத் தெளிவாக்குகின்றன. மயக்கங்கள், திரிபுகள், மாறுபட்ட விள்கங்களுக்கப்பால் அஹ்லுல் பைத்தினரின் மாண்பும், அவர்கள் யாவர் என்பதும் வெள்ளிடைமலையாக ஜொலிக்கின்றன. இதன்படி ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி, ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய ஐவருமே தூய்மை பெற்ற அஹ்லுல் பைத்தினராகும்.
மேற்படி சம்பவத்தில் இவர்கள் ஒரு போர்வை (அபா) யினால் போர்தப்பட்டிருப்ப்தால்; இந்த ஹதீஸ் போர்வை ஹதீத் எனவும் விளங்குகின்றது. அந்த ஐவரும் போர்வைக்குரியவர்கள் என்று புகழப்படுகின்றனர்.
புகழ் பெற்ற சங்கைக்குரிய மாப்பிள்ளை ஆலிம் சாஹிப் (ரஹ்) பாத்திமா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் புகழும் தனது பிரசித்தி பெற்ற தலைப்பாத்திஹா வில் பின்வருமாறு பாடுகின்றார்கள்:
அஹ்லுல் அபா என்னும்
ஐவர் தம்மினில்
ஆகிய நாயகியைப் புகழ்வோம்
(அஹ்லுல் அபா போர்வைக்குரியோர்)
ஆயத்துத் தத்ஹீர் என்ற மேற்படி திருவசனமும் ஹதீத் அபா எனும் மேற்படி ஹதீதும் அஹ்லுல் பைத்தினராகிய அந்த ஐவரினதும் சீரையும், சிறப்பையும் தூய்மையையும் எமக்கு போதிக்கின்றன. தூய்மையான தலைமைத்துவப் பண்புகள் அஹ்லுல் பைத்தினருக்கே சொந்தமான சிறப்பியல்பாகும். இதன் அடியொற்றியே உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் வெற்றிப்படிகள் கட்டப்பட்டுள்ளன.
தொழுகைக்கு அழைத்தல்
நபியே உங்கள் குடும்பத்தினரை தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! தோழுகையின் மீது நீர் பொறுமையும் உறுதியும் கொண்டிருப்பீராக! அல்குர்ஆன் 20: 132.
மேற்படி திருவசனம் அருளப்பட்டதிலிருந்து பல மாத காலங்களாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்காக செல்கையில் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஹஸ்ரத் பாத்திமா அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வீட்டைக் கடக்கும்போது இத்திருவசனத்தை தினமும் ஓதுவார்கள்.
மேலும் ஓ..அஹ்லுல் பைத்தினரே! உங்களை விட்டு அசுத்தங்களை நீக்கி வைக்கவும் உங்களை (ப்பாவங்களை விட்டு) முற்றுமுழுதாகத் தூய்மையாக்கவுமே அல்லாஹ் விரும்புகின்றான். (33:33) என்ற திருவசனத்தையும் அங்கே ஓதுவார்கள்.
இது பற்றி பிரசித்தி பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளர் பஹ்ருத்தீன் அர் ராஸி தமது அத்தப்ஸீருல் கபீர் என்ற கிரந்தத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்கள். (அனஸ் இப்னுமாலிக் (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீது அலி இப்னு ஸெஸ்யித் அவர்களால் பதியப்பட்டுள்ளது. ஆதாரம்: ஜாமி உல் உஸுல் பாகம் 9. பக்கம்-156, முஸ்தத்ரகுல் ஹாகிம் பாகம் 3. பக்கம்-158, ஸஹீஹுத் திர்மிதி, அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
அஹ்லுல் பைத்தினரின் வீட்டை ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கடக்கும் போது மேற்படி திருவசனங்களை ஓதி வந்தது மிகப் பெரிய உள்ளர்த்தம் கொண்டதொரு செயலாகும். வெருமனே தொழுகையை ஏவதல் என்பதாக இது அமைய மாட்டாது. வேறு எவரினதும் வீட்டை நோக்கி அன்னவர்கள் இவ்வாறு ஒரு போதும் அழைத்ததில்லை. காரண காரியம் இன்றி அண்ணலார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் சொல்லும் செயலும் இருந்ததில்லை.
இதன் மூலம் உலகலாவிய முஸ்லிம் உம்மத்தினர் பரிசுத்த அஹ்லுல் பைத்தினரின் சீரிய தலைமைத்துவப் பண்புகளையும் தூய்மைகளையும் நோக்கி தமது பின்பற்றலைத் தொடரவுமே இவ்வாறான சம்பவங்கள் அறிவுரை பகர்கின்றன. இந்த விடயத்தில் சகல அறிஞர்களுமே ஒன்றுபட்ட கருத்தை தெரிவிக்கின்றனர்.
முத்தஹ்ஹரூன் – தூய்மையாளர்கள்
தூய்மைகளைத் தவிர வேறொருவரும் இதனைத் தொட மாட்டார்கள். அல்குர்ஆன் 56:79
அல்குர்ஆனில் உள்ளடக்கம், சிறப்புக்கள் பற்றி அல்லாஹ் விபரிக்கையில் மேற்படி வசனம் இறங்கியது. மேலோட்டமாகப் பார்க்கையில் சுத்தமானவர்கள் அல்லாதோர் அல்குர்ஆனைத் தொடமாட்டார்கள் அல்லது அசுத்தமானவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற பாங்கில்தான் இந்த இறை வசனத்தின் கருத்து விபரிக்கப்படுகின்றது. ஆனால் இதன் உள்ளர்த்தமான கருத்து தத்ஹீருடைய- தூய்மை நிறைந்த முத்தஹ்ஹரூன் - தூய்மையாளர்களே இந்த அல்குர்ஆனின் உள்ளடக்கத்தை உன்மையாக - விபரமாக் - ஆழமாக அறிந்து கொள்வார்கள் என்பதாக அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன்படி தத்ஹீர் நிறைந்தவர்கள் அல்லாஹ்வின் திருவசனப்படி (33:33) அஹ்லுல் பைத்தினரே ஆவர். மேலும் பின்பற்றக் கூடிய இரண்டு விடயங்களாக தக்லைன் அல்குர்ஆனும் அஹ்லுல் பைத்துமே உள்ளன.
ஞானம்
அஹ்லுல் பைத்தினர் இறை ஞானம் மிக்கவர்கள். அவர்களின் அறிவு ஞானத்துக்;கு ஒப்புவமை கிடையாது. அவர்களுக்கு இணையாக வேறு எவரையேனும் குறிப்பிட்டுக் காட்டவும் முடியாது.
ஒரு முறை இமாம் அபூ ஹம்பலிடம் (ரஹ்) அவரது மகனார் சஹாபாக்களில் சிறப்பானவர்கள் யார், யார் எனக் கேட்டார்.
அதற்கு இமாம் அபூ ஹம்பல் அபூபக்கர், உமர், உதுமான் எனப் பதிலளித்தார் இதைக்கேட்ட மகனார் அப்படியானால் அலி அலைஹிஸ்ஸலாம் ..? என வினவிய போது அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அஹ்லுல் பைத்தைச் சார்ந்தவர்கள். ஒப்பீட்டுக்கு அப்பாலுள்ளவர்கள் எனப் பதிலளித்தார் இமாம் அபூ ஹம்பல் (ரஹ்).
இமாம் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகின்றார்கள்:
அஹ்லுல் பைத்தினராகிய எமக்கு ஹிக்மத் எனும் ஞானத்தை வழங்கிய அல்லாவுக்கே எல்லாப் புகழும். ஆதாரம்: இமாம் அஹ்மத்: மனாகிப், இப்னு ஹஜர்: அஸ்ஸவாயிக்குல் முஹ்ரிகா
எனவே தூய்மைமிக்க, உயர்வு மிக்க, தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த பரிசுத்த குடும்பத்தினர் மீது அன்பு (ஹுப்பு) வைத்தவர்களாகவும், எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். இதற்கு வல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!.
துர்ரியத் - முன்னோர்
நிச்சயமாக ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியாரையும், இம்ரானின் சந்ததியாரையும், அல்லாஹ் அகிலத்தார் அனைவரையும் விட மேலானவர்களாய் தேர்ந்தெடுத்தான். அல்குர்ஆன் 3:33
அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறை தூதர்கள் அவ்வப்போது தோன்றி மானுடரை இறை பாதையில் வழி நடத்தி வந்தார்கள். அவர்கள் சகல அசுத்தங்களை விட்டும் தூய்மைப்படுத்தப் பட்டவர்களாகும். விசுவாசம், பக்தி, இறையச்சம், பிரசாரம், அல்லாஹ்வை அன்றி யாருக்குமே அடிபணியாமை, நற்குணவியல்புகள், ஞானம் என்பவற்றில் இறை தூதர்கள் மானுடர் அனைவரையும் மிகைத்தவர்களாகும். ஊயர்ந்தவர்களாகும்.
இறை தூதர்கள் வரிசையில் முதலாமவர் ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் . இறுதியானவர் ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி. ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொட்டு இறுதித் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வரை. ஒரு சங்கிலித் தொடரான சந்ததித் தொடர்பு இருந்து வருகின்றது. இது வல்ல நாயனின் ஏற்பாடாகும்.
எமது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்தோன்றலாகும். இப்றாஹீமின் சந்ததியாரும், இம்ரானின் சந்ததியாரும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் முன்னோர்களாகும். இந்த சந்ததியினரின் முஃமின்கள் வரிசையிலே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தோன்றினார்கள். இதுபற்றி மேற்குறித்த திருவசனம் தெளிவான விளக்கத்தை தருகின்றது. ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் சந்ததியார் பற்றிய விளக்கம் கோரப்பட்டபோது.
ஆல இப்றாஹீம், ஆல இம்ரான் எனப்படுபவர்கள் இப்றாஹீம், இம்றான், முஹம்மத் ஆகியோரின் (சந்ததிக்) குடும்பத்தினரில் முஃமீன்கள் ஆவர் எனப் பதிலலித்தார்கள். (அறிவிப்பாளர்: அப்பாஸ் (ரழி), ஆதாரம்: துர்ருல் மன்சூர், இமாம் ஸுயூதி)
இது பற்றிய மேலதிக தெளிவை பின்வரும் அல்குர்ஆன் எமக்கு தருகின்றது:
(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார். மேலும் அல்லாஹ் (யாவரையும்) செவியுருவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிளன்றான். அல்குர்ஆன் 3:34.
ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஆதம் அலைஹிஸ்ஸலாம் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் வரிசையில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியினராகும். இதன்படி ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் யாவரையும் மிகைத்த, யாவரிலும் மேலான ஒரு சந்ததியைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்து கொள்கின்றோம். இதுபோலவே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பிற் சந்ததியினரும் யாவரையும் விட மேலான ஓர் உயர் அந்தஸ்தைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர். ஹஸ்ரத் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் முற்சந்ததியும், பிற்சந்ததியும் பரிசுத்தவான்களாவர். தூய்மை பெற்ற அவர்கள் உலகத்தாரை வழிநடத்தும் தகுதி பெற்றவர்களாய் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.
மவத்தாஹ் - பிரியம் கொள்ளல்
சேவைக்குக் கூலி
எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இவ்வுலகையும், பிரபஞசங்களையும் படைத்து, உயிரினங்களையும் படைத்து அவற்றைப் பரிபாலித்துப் போஷித்து வருகின்றான். எமக்கு பிறப்பையும் மரணத்தையும் தருகின்றான். அதில் இன்மையையும் மறுமையையும் அமைத்துள்ளான்.
மானுடரைப் படைத்து நல்லது, கெட்டது எவை என்பதைப் பிரித்தறியும் பகுத்தறிவையும் கொடுத்து, நல்லது எது கெட்டது எது என்பவற்றிக்கான வரையரைகளையும் வகுத்து நேர்வழி காட்டுவதற்காய் ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் வரை ஓர் இலட்சத்து இருபதினாயிரம் இறை தூதர்களையும் அனுப்பி வைத்தான்.
இத்தனைக்கும் இவ்வுலகின் இப் பிரபஞ்சத்தின் அத்தனை வசதிகளுக்குமாய் இறைவன் எம்மிடம் எதிர்பார்க்கும் கூலிதான் என்ன? அதுபோல் அவனால் அனுப்ப்பட்ட இறை தூதர்கள் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் ஏச்சும் பேச்சும் சக்த்து, கல்லடி பொல்லடி பெற்று தம் இன்னுயிர்களையே இறை பணிக்காய் அர்ப்பணித்து மக்களை நேர்வழி காட்டியதற்காய் என்ன கூலியை எம்மிடம் கேட்டார்கள்? எமது ஈருலக ஈடேற்றத்திற்கு வழிகாட்டிய அந்த ஒளி விளக்குகள் எம்மிடம் எதிர்பார்த்தது என்ன?
இத்தனை சேவைக்கும் நாம் அவர்களுக்கு செய்த கைமாறுதான் என்ன? மானிடவர்க்கம் அன்று முதல் இன்று வரை அவர்களின் சேவைக்கு வழங்கிய கூலிதான் என்ன? பிரதியுபகாரம் எதிர்பார்த்தா அன்னவர்கள் எம்மை நெரிப்படுத்தினர்? மிருகங்களாக வாழ்ந்த எம்மை- ஷைத்தானியத்தனம் நிறைந்திருந்த எம்மை நாகரீகத்தின் பால் அழைத்து வந்த அவர்கட்கு நாம் கொடுத்த பரிசுதான் என்ன? இறை தூதர்கள் என்ன கூலியைக்கேட்டார்கள் என்பது பற்றி இறைமறை கூறுவதைக் கவனிப்போம்.
ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது சமுதாயத்தினரை நோக்கி-
நிச்சயமாக நான் உங்களுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதனாவேன். ஆகவே அல்லாவுக்கு அஞ்சுங்கள், எனக்கு வழிப்படுங்கள். இதற்காக நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கின்றது என்று கூறினார்கள். அல்குர்ஆன் 26:107,108,109
ஹஸ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் சமுதாயமக்களிடம் தனது பணிக்காக எதுவித கூலியையுமே கேட்கவில்லை
ஹஸ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்
ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மக்களை நோக்கி பின்வருமாறு கூறினார்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன். ஆகவே அல்லாவுக்கு அஞ்சுங்கள் எனக்கும் வழிப்படுங்கள். மேலும் இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிppலங்களின் இறைவனிடமே இருக்கின்றது. அல்குர்ஆன் 26: 178,179,180.
ஹஸ்ரத் ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தம்முடைய மக்களிடம் தமது இறைபனிக்காக யாதொரு கூலியையும் கேட்கவில்லை.
இவ்வாரே ஏனைய நபிமார்களும் மக்களிடம் தமது பனிக்காக சேவைக்காக யாதொரு பலனையும். கூலியையும் எதிர்பார்க்கவுமில்லை கேட்கவுமில்லை.
இறை தூதர்களின் தொடரில் இறுதியாக வந்த எமது நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் எல்லாம் வல்ல இறைவன் கூறுகின்றான்.
கூறுவீராக! நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை (அப்படிக் கேட்டிருந்தாலு ம் அது)உங்களுக்கே இருக்கட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி(உங்களிடம்) இல்லை. அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாய் இருக்கின்றான். அல்குர்ஆன் 34:47;
அல்குர்ஆனின் இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் பின்வருமாறு கூறுகின்றான்.
..(நபியே) நீர் கூறும்: உறவினர்கள் (குர்பா) மீது அன்பு கொள்வதைத் தவிர இதற் காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை.. அல்குர்ஆன் 42:23
இந்த இரண்டு வசனங்களிலும் இருந்து நாம் விலங்கிக் கொள்வது என்ன? முதல் வசனத்தில் (அப்படிக் கேட்டிருந்தாலும்) அது உங்களுக்கே இருக்கட்டும் என்று வருகின்றது அதாவது ஓர் உதவி கேட்டு அந்த உதவியை நாம் செய்தால் அதனால் கிடைக்கும் இலாபம் கேட்டவரான நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு தேவையற்றதாகவே உள்ளது. ஆக அப்படி நம்மிடம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஓர் உதவியை கேட்டிருந்தால் அதன் நன்மை எமக்கே உரித்தாகும். ஆதாவது அதனை செய்து கொடுத்து லாபம் அடையப் போவது நாமேயாகும்.
இரண்டாவது வசனத்தில் உறவினர்கள் (குர்பா) மீது அன்பு கொளவதைத் தவிர என்று வருகின்றது. இதிலிருந்து கேட்கப்படும் கூலி வரையரை செய்யப்பட்டுள்ளது. அதாவது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தம்முடைய குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துவதைத் தவிர வேரொரு கூலியையும் எம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இந்த இரண்டு வசனங்களையும் ஆராய்ந்து விளக்கும் அல்குர்ஆனியல் அறிஞர்களின் கருத்தின்படி கூலியாக கேட்கப்பட்ட குடும்பத்தினர் மீது அன்பு செலுத்துதல் என்பது நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் பயன்பெறுவது - நன்மை அடைவது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் உம்மத்தாகிய நாமேயன்றி நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்ல. ஆக- நாம் அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி குர்பா மீது அன்பு செலுத்தினால் எமக்கே அது நன்மைகளை அள்ளித்தரும் என்பதே உண்மையாகும்.
மேலும் அல்குர்ஆனியல் அறிஞர்களின் கருத்துப்படி இந்த வசனத்தில் கையாளப்பட்டுள்ள குர்பா எனும் பதம் அஹ்லுல் பைத்தினரையே குறிக்கின்றது. அத்துடன் முன்னைய அத்தியாயத்தில் நாம் அறிந்து கொண்ட ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையையும் நாம் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும். அதாவது என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயாக) இதுவே இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரார்த்தனையாகும். ஹஸ்ரத் நபிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் உங்கள் குர்பா (எனும் நெருங்கிய உறவினர்) யார் யார் என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் அலீ, பாத்திமா, மற்றும் அவர்களின் இரு புதல்வர்கள் (ஹஸன், ஹுஸைன்) எனப் பதிலளித்தார்கள்.
தப்ஸீர் மேதை பஹ்ருத்தீன் அர்ராஸி தமது அத்தப்ஸீர் அல் கபீரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
முஹம்மதின் ஆல்; என்று நான் குறிப்பிடுபவர்களின் விடயம் முற்று முழுதாகவே அன்னவர்களுள் பின்னிப்பிணைந்ததொன்றாகும்.. மேலும் அலீ, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோரைவிட எவருமே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கட்கு நெருங்கியவர்கள் இல்லை. இது சங்கிலித் தொடராக வரும் ஹதீதுகளின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவர்களே முஹம்மதின் ஆல் (குடும்பத்தவர்) எனப்படுவோர்.
தலைமைத்துவம்

இப்றாஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளை இட்டு சோதனை செய்தான். அவை அனைத்தையுமே அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அவரிடம்) நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) என்னுடைய சந்ததியினரிலும் (இமாம்களை) ஆக்குவாயாக! எனக் கேட்டார். என் வாக்குறுதி (அச்சந்ததியிலுள்;ள) அநியாயக் காரர்களைச் சாராது என்று அவன் கூறினான். அல்குர்ஆன் 2:124
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் இமாம்; என்ற உயரிய அந்தஸ்தைப் பரிசாக அளித்த போது அவர்கள் தம் சந்ததியிலும் இமாம்களை ஆக்குமாறு வேண்டினார்கள். அதன்படியே அந்த சந்ததியின் அநியாயக் காரர்களைத் தவிர்ந்த தூயவர்கள் பலரை அல்லாஹ் தலைவர்களாக- பிரதிநிதிகளாக ஆக்கி அருள் புரிந்தான்.
உங்களுடைய வலிகள் (பாதுகாவலர்) எல்லாம், அல்லாஹ்வும், அவனது தூதரும் இன்னும் விசுவாசம் கொண்டவர்களுமேயாகும். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிந்தவர்களாக தொழுகை யை நிறைவேற்றுபவர்களாகவும் ஸக்காத்தை (ருகூவிலும்) கொடுப்பவர்களுமாகும். அல்குர்ஆன் 5:55
இன்னும் எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டவர்களையும் தமது பாதுகாவலர்களாய் எடுத்துக் கொள்கின்றார்களோ நிச்சயமாக அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அவர்கள் தாம் வெற்றியாளர்கள். அல்குர்ஆன் 5:56
மேற்குறித்த இறைவசனங்களில் குறிப்பிடப்படுகின்ற விசுவாசம் கொண்டவர்கள் என்ற பதங்கள் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களையே குறிக்கின்றன என்று அல்குர்ஆன் விரிவுரையாளர் ஸமக்ஷரி தமது அல்-கஷ்ஷாப் என்ற தப்ஸீரில் குறிப்பிடுகின்றார். மேலும் பல விரிவுரையாளர்கள் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
முபாஹலா - விவாதம்
இஸ்லாத்தின் தூதை எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் திக்கெட்டும் பரப்பிக் கொண்டிருந்த காலம் அது. இஸ்லாத்தின் பால் மானுடர் கூட்டங் கூட்டமாக சேர்ந்து கொண்டும், சேரத் துடித்துக் கொண்டுமிருந்தனர். இது ஒருபுறம். முறுபுறத்தில் இஸ்லாத்தை நம்பாமல் நிராகரித்து நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை பொய்யர் புழகர் என்று பிரச்சாரமும் நடந்து கொண்டிருந்தது. விதண்டாவாதம், குதர்க்கவாதம் என்பவற்றை ஆயதங்களாகக் கொண்டு சில மதக் குழுக்களும், சிலை வணங்கிகளும் இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
அக்காலங்களில் இவ்விடயம் சம்பந்தமான தெளிவிற்கான அறைகூவலாக இறங்கியது பின்வரும் இறைவசனம்.
நபியே இது பற்றி முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் இதைக் குறித்துத் தர்க்கம் செய்தால் வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் புதல்வர்களையும், உங்கள் பெண்களையும் எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக்கொண்டு) பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என்று நாம் பிரார்த்திப்போம் என நீர் கூறும்.
இந்த வசனம் இறங்கிய காலம் கவனத்திற்கொள்ளத்தக்கது. நஜ்ரான் தேசத்து கிறிஸ்தவர்கள் சிலர் இஸ்லாத்தினை ஏற்காது தம்முடைய மார்க்கமே சிறந்தது என்று கூறிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இஸ்லாமிய விளக்கங்கள் கசப்பாய் இருந்தன. அவற்றை அவர்கள் பொய்யாக்கிக்கொண்டிருந்தனர். குதர்க்கவாதம் செய்த கொண்டிருந்தனர். எனவேதான் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை இப்படியானதொரு சிக்கல் நிறைந்த விவாதத்திற்கு வருமாறும் அதில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்திற்க ஒப்புக் கொள்ளுமாறும் அழைக்கும்படி கூறினான். இந்த இறை கட்டளைப்படி நஜ்ரான் தேசத்துகிற்ஜஸ்தவ தலைவருக்கும் அவரது கூட்டத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும் அந்தக் கிறிஸ்தவக் குழுவினரும் விவாதத்திற்கு தயாரானார்கள்.நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தம்முடன் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் , ஹஸரத் பாத்திமா அலைஹாஸலாம், ஹஸ்ரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரை அழைத்துச் சென்றார்கள். அல்குர்ஆன் வசனத்தின் படி எங்கள் புதல்வர்களையும் என்ற ரீதியில் ஹஸ்ரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரும், எங்கள் பெண்களையும், என்ற ரீதியில் ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்களையும், எங்களையும் என்ற ரீதியில் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள்.
இதில் எங்களையும் என்ற பதம் அன்புஸஹும் என்ற அறபு பதத்தின் தமிழ் வடிவமே ஆகும். எங்களை எனும் போது ஒரே நப்ஸில் (ஆத்மாவில்) இருந்து பிறந்த ஒன்றுக்கு மேற்பட்டவர் என்ற பொருள் வருகின்றது.
ஹஸ்ரத் மூஸாவின் நப்ஸாக- நப்ஸிலிருந்தும் உள்ளவராக ஹாறூன் இருந்தது போல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் நப்சாக- நப்ஸிலஸருந்து உள்ளவராக ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் இருக்கிறார்கள் என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறிளார்கள்.
ஆக புதல்வர்களாக ஹஸனும் அலைஹிஸ்ஸலாம் , ஹுஸைனும் அலைஹிஸ்ஸலாம் ; பெண்களில் ஹஸ்ரத் பாத்திமாவும் (அலைஹாஸலா), எங்களை என்பதாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சென்றார்கள். அதாவது பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்றபிரார்த்தனையை முன்னிறுத்திய விவாதத்தில் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், அவர்களின் பரிசுத்த குடும்பமாகிய அஹ்லுல் பைத்தினரும் மட்டுமே பணயமாக வைக்கப்பட்டனர்.
இப்படியான ஒரு நிகழ்வு பங்கு பற்றக் கூடிய தார தண்மியம் அவர்களிடம் மட்டும் இருந்தமையே இதன் காரணமாகும்.
விவாதத்திற்கான இடத்தில் இரு சாராருமே கூடிவிட்டனர். ஒவ்வொரு கணமும் பரபரப்பாக கழிந்து கொண்டிருந்தது. அங்கே அந்த கிறிஸ்தவ கூட்டத்தினரில் ஒரு வயோதிபரும் இருந்தார்.அவர் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களையும், அஹ்லுல் பைத்தினரையும் கூர்மையாகப் பார்த்தார்.பார்த்த மாத்திரத்திலேயே அவர் மனதில் ஒருவித அச்சம் கடி கொண்டு விட்டது அதனை அவரது முகம் துலாம்பரமாகக் காட்டியது.
புரபரப்படைந்த அந்த வயோதிபர் தமது கூட்டத்தினரை பார்த்து- ஜொலிக்கின்ற இந்த முகம்களைப் போன்ற வேறு முகம்களை நான் எங்குமே, என்றுமே கண்டதில்லை. இவர்கள் பரிசுத்தவான்கள். இந்த முகம்களின் பொருட்டில் பெரிய பெரிய மலைகளையே அல்லாஹ் புரட்டி விடுவான்.
எனவே அவர்களுடன் நீங்கள் விவாதம் புரியாதீர்கள் அப்படி மீறி நீங்கள் விவாதம் புரிந்தீர்களேயானால் இந்த உலகம் அழியும் வரை இந்த உலகில் ஒரு கிறிஸ்தவரேனும் மிஞ்சமாட்டோம் என்று நிதானமாக அதே வேளை அழுத்தமாக கூறினார். இந்த பேச்சைக் கேட்ட கிறிஸ்தவக் குழுவினர் பின் வாங்கி விவாதத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.
மேற்படி சம்பவம், விடயங்கள் தொடர்பான ஆதாரங்கள் பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன. விரிவஞ்சி சிலவற்றை மட்டுமே கீழே தருகின்றோம்.
ஸஹீஹுல் முஸ்லிம், ஸஹீஹுத் திர்மிதி, பஹ்ருஸ் சாலி, தப்ஸீரல் கபீர், அல் கஷ்ஷாப், தபாரி, அபுல், பிதா, இப்னு,கதிர், ஸுயூதி போன்ற வரலாற்றாசிரியர்களும, அல்குர்ஆன், அல்ஹதீஸ் விரிவுரையாளர்களும். இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளதுடன் இதன் சிறப்பையும் எழுதியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தின் ஒளியில் அலீ, பாத்திமா, ஹஸன், ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய அஹ்லுல் பைத்தினரின் உயர்வை நாம் தெளிவுரப் புரிகின்றோம்.
இது ஓர் உலகளாவிய உண்மையாகும். அல்லாஹ்வும், அவனது அருமை நபிகளாரும் போற்றிப் புகழும் அஹ்லுல் பைத்தினரை நாமும் புகழ்ந்து அன்பு கொண்டு பின்பற்றி வாழ்வோம்.
ஸலாமும் ஸலவாத்தும்
அகிலத்தார்க்கெல்லாம் அருட்கொடையாக வந்த அண்ணல் நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களைக் கௌரவிப்பதற்காய் அன்னவர்கள் மீது ஸலாமும், ஸலவாத்தும் கூறுமாறு வானவர்களை அல்லாஹ் பணித்தான். அது போல் அன்னவர்கள் மீது முஃமின்களும் ஸலாமும் ஸலவாத்தும் கூறுமாறும் அவன் கட்டளையிட்டான்.
இந்த நபியின் மீது அல்லாஹ் ஸலவாத் சொல்கின்றான் மலக்குகளும் ஸலவாத் சொல்கின்றனர்.முஃமீன்களே! நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லி ஸலாமும் சொல்லுங்கள்.
இந்த இறை வசனம் அருளப்பட்டபோது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் ஸஹாபாக்கள் பின்வருமாறு கேட்டனர்.
யாரஸுலுல்லாஹ்! உங்கள் மீது ஸலாம் சொல்வதை நாங்கள் கற்றுக் கொண்டோம். உங்கள் மீது ஸலவாத் கூறுவது எவ்வாறு:
அதற்குப் பதிலாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் பின்வரும் ஸலவாத்தை கூறிக்காட்டினார்கள்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஆலி முஹம்மதின் கமா ஸல்லைய்த அலா இப்றாஹீம் வ அலா ஆலி இப்றாஹீம் வபாரிக் அலா முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம் வஅலா ஆலி இப்றாஹீம் இன்னக ஹமீதுன் மஜீத்.
(அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), தல்ஹா (ரலி), அபூ சபீத் அல் குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி),அபூ மஸ்ஊத் அல் அன்ஸாரி (ரலி), கஅப் இப்னு அம்ரா (ரலி), அலி அலைஹிஸ்ஸலாம் )
ஸலவாத் சொல்லும் போது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீதும் அவர்களின் அஹ்லுல் பைத்தினர் மீதும் ஸலவாத் சொல்லுவது வாஜிபாகும். அத்துடன் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் ஸலவாத் சேர்த்துச் சொல்லுதல் ஸுன்னத்தாகும். இந்த விடயம் சம்பந்தமான 18 ஹதீதுகள் பல்வேறு கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன.
மேலும் ஆகக்குறைந்த ஸலவாத் என அறிஞர் பெருமக்கள் கருத்தொருமித்து கூறிய ஸலவாத் பின்வருமாறு அமைகின்றது: ;
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத்.
நபிகளாரின் அஹ்லுல் பைத்தினரைச்சேர்த்துக் கொள்ளாத ஸலவாத் ஸலவாத் ஆகாது என இமாம் ஷாபிஈ, இமாம் அபூஹனிபா, இமாம் மாலிக், இமாம் அபூ ஹம்பல் போன்ற மார்க்க சட்டவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழுகையில் ;ஸலவாத் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். ஸலவாத் இல்லாத தொழுகை பாதில் ஆகிவிடும். ஸலவாத்தில் அஹ்லுல் பைத் சேர்க்கப்படாவிடின் ஸலவாத் பாதில் ஆகிவிடும்.
அதன்படி அஹ்லுல் பைத் மீது ஸலவாத் சொல்லாமல் நிறைவேற்றப்படும் தொழுகை கூட பாதில் ஆகிவிடும். இந்தக் கருத்தை எல்லா இமாம்களும் வலியுருத்துகின்றனர்.
இது பற்றி இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கவிதை ஒன்று உள்ளது. அதில் அவர்கள்.
அஹ்லுல் பைத்தினரே!
உங்களை நேசிப்பது கடமை
யார் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ
அவரின் தொழுகை கூடாது.
மேலும் அவர் தமது கவிதை ஒன்றில் பின் வருமாறு பாடுகின்றார்.
ஓ..(வாகன) ஓட்டியே! கற்கள் நிறைந்த
மினா மண்ணில் எழுந்து நில்!
கிப் இல் தடுபட்டவர்க்காய் ஓலமிடு!
யாத்திரீகர் மினாவை அடைந்ததும்
உணர்வு கொண்டெழு!
யூப்பிரட்டீஸின் உருள்கின்ற அலைகள்
போல் இயங்கு
முஹம்மதின் ஆல் மீது அன்பு வைத்தல்
மாறுபாடு என்றால்
எல்லா ஜின்களும் எல்லா மனிதருமே
சாட்சி கூறுவர் தாம் மாறுபட்டவர் என்றே!
மேலும் அவர் கூறுகின்றார்:
ஓ அஹ்லுல் பைத்!
உங்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
உங்கள் மீதான நேசம் அவனால் கடமையாக்கப்பட்டுள்ளது.
உங்கள் மீதான அருளினால் நான் திருப்தியடைகின்றேன்.
உங்கள் மீதான அவனின் வாழ்த்து அது.
உங்களை மதியாதோரின் கதி வேறில்லை..
அஹ்லுல் பைத் மீது நேசம் வைத்தல்
நபிகளாரின் புண்ணிய குடும்பத்தினராகிய அஹ்லுல் பைத் மீது நேசம் வைப்பது எம்மீது கடமையாகும். இது பற்றி எண்ணற்ற கதீதுகள் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. அவற்றில் சிலதை மட்டும் விரிவஞ்சி குறிப்பிடுகின்றோம்.
என்மீது கொண்ட நேசத்திற்காக எனது அஹ்லுல்பைத்தை நேசியுங்கள். என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸஹீஹுத் திர்மிதி : பாகம் 2 பக்கம் 308, தாரிக் பஃதாதி: பாகம் 4 பக்கம் 159, முஸ்தத்ரகுல் ஹாக்கிம்: பாகம் 3 பக்கம் 149
எனது மரணத்தின் பின்னர் உங்களில் சிறந்தவர் யாரெனில் எனது குடும்பத்தினரில் அன்புடையவரே.என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்.
இமாம் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் அஹ்லுல் பைத்தை சேர்ந்தவன். முஸ்லிம்கள் எல்லோரும் அன்பு செலுத்த வேண்டும் என்று இறைவனால் பணிக்கப்பட்ட அஹ்லுல்பைத்தைச் சேர்ந்தவன். இவ்வாறு அவர்கள் கூறியதுடன் நிற்காமல்.
(நபியே) நீர் கூறும்! உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத்தவிர இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை என்ற அல்குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்.
இந்த அறிவிப்பில் வரும் குர்பா என்ற பதம் அஹ்லுல் பைத்தையே குறிக்கின்றது என்பதற்கு சான்றாக அமைகின்றது.
அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வழியில் அஹ்லுல்பைத்
அண்ணல் நபிகளார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் ஹதீதுகளிலும், அவர்களின் அஹ்லுல் பைத்துடனான தினசரித் தொடர்புகளிலும் அஹ்லுல் பைத்துடனான உறவு முறைகளிலும் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரின் சிறப்பியல்புகள் உயர்வுகள் நிறைநிதிருப்பதை நாம் காணலாம். அல்லாஹ் தமது திருமறை அல்குர்ஆனில் தூய்மைப்படுத்தியுள்ள அஹ்லுல் பைத்தினர் ஓர் உன்னத பணிக்காகவே அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
இஸ்லாமிய சமூகத்தை வழிநடத்துவதிலும் இஸ்லாமிய வரலாற்றை செப்பனிடுவதிலும் அஹ்லுல் பைத்தினரின் பணி மகத்தானது. அதனாலேயே அஹ்லுல் பைத்தினர் பற்றிய விடயங்களை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அடிக்கடி வலியுருத்தி கூறியுள்ளார்கள். அஹ்லுல் பைத்தினரின் பிரகாசமிக்க வழிகாட்டுதலை பல தடவைகள் எதிர்வு கூறியுள்ளார்கள். சாதாரணமாக இரத்த உறவுக்காரர் என்பதால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அஹ்லுல் பைத்தினரைப் புகழலவில்லை. அல்லாஹ்வின் கட்டளைப்படி அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வாழ்ந்தார்கள்: வழகாட்டினார்கள். அவர்களின் ஒவ்வொரு சொல்லும் செயலும் முடிவுகளும் ஏன் சிந்தனைகளும் கூட அல்லாஹ்வின் கட்டளைக்கு இனங்கவே அமைந்திருந்தன.
அஹ்லுல் பைத்தினர் என்ற கட்டமைப்பின் அடிக்கல்லாக ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் பாத்திமா அலைஹிஸ்ஸலாம் , அவர்களின் திருமணம் அமைகின்றது. ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறு வயது முதலே நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களால் வளர்க்கப்பட்டார்கள். தனது சிறிய தந்தையின் ஏழ்மை நிலையினால் அவரது மகனான ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களை வளர்க்கும் பொறுப்பை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். மேலும் ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அருமைப் புதல்வியாவர். எனவே அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி நேரடியான வழிகாட்டுதலிலும் பராமரிப்பிலுமே இவர்கள் வாழ்ந்தார்கள்.
அருள் பெற்ற அஹ்லுல் பைத் என்ற அந்த மரத்தின் விதையாக இத்திருமணம் நிகழ்ந்தது. பின்னர் செழித்து வளர்ந்து கிளைகளை பரப்பி பெரு விருட்சமாக அது மாறியது.
அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்.
அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி நானூறு மித்கால் வெள்ளி மஹருக்கு பாத்திமாவை உமக்கு மணமுடித்து தருமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீர் இதனை ஏற்றுக் கொள்வீரா? எனக் கேட்டார்கள்.
ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இதற்கு சாதகமாகப் பதிலளித்தார்கள். இதனை; கேட்ட அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி:
அல்லாஹ் உம்முடன் இனைந்து கொள்வானாக! உம்மைச் சந்தோஷப் படுத்துவானாக! உம்மீது அருள் பொழிவானாக! உம்மிடமிருந்து நல்லவை பலவற்றை வெளிப்படுத்துவானாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.
மேலும் அல்லாஹ் மீது ஆணையாக அவன் அவர்களிடமிருந்து நல்ல பலவற்றை வெளிக் கொணர்ந்தான் என்றும் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.
ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் ஹஸ்ரத் பாத்திமா அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் திருமணம் முடிந்த பின் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வுளுச் செய்து கொண்டார்கள். அந்த தண்ணீரை மணமக்கள் இருவர் மீதும் தெளித்தவர்களாய் பின் வருமாறு விளம்பினார்கள்:
அல்லாஹ் அவர்களின் வாரிசுகளின் பேரால் அவர்கள் மீது அருள் பொழிகின்றான். ஆதாரம்: தபாரி
ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்கள் திருமண பராயத்தை அடைந்த காலங்களில் பலர் அவர்களை பெண் கேட்டு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை அணுகினர். அதில் பல முக்கிய நாயகத் தோழர்களும் அடங்குவர். அப்போதெல்லாம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் பெண் கேட்டவர்களிடம் பின்வரும் பதிலையே கூறினார்கள்.
(அல்லாஹ்விடமிருந்து) பாத்திமாவின் திருமணம் பற்றிய கட்டளை ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.
ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம் அவர்களை மணம் முடித்து சில வருடங்களில் அவர்களுக்கு ஹஸன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் பிறந்தார்கள் இந்த இருவரும் கூட அண்ணல் நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி நேரடி வழிகாட்டுதலிலேயே வளர்க்கப்பட்டார்கள்.
ஆக அஹ்லுல் பைத்தினரான ஹஸ்ரத் அலி அலைஹிஸ்ஸலாம் ஹஸ்ரத் பாத்திமா அலைஹாஸலாம், ஹஸ்ரத் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் , ஹஸ்ரத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நாள்வருமே அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களாலேயே வளர்க்கப்பட்டனர்.இதனால் அவர்களின் வாழ்வு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களை அச்சொட்டாகப் பின்பற்றியே அமைந்திருந்தது. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வாழ்வு இறைமறையாகவே இருந்தது. இதனால் தான் இறைமறையும், இறைத்தூதரின் புண்ணிய குடும்பமும் ஒன்றில் ஒன்று பிரியாது பின்னிப் பிணைந்ததாக அமைந்தது. இவ்வாரான பெருமைகள் உயர்வுகள் நிரம்பிய அஹ்லுல் பைத் பற்றி நூற்றுக் கணக்கான ஹதீதுகள் வந்துள்ளன. அவற்றுட் சிலவற்றை சற்று விரிவாக நோக்குவோம்.
தக்லைன்: இரு முக்கிய விடயங்கள்
எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மானுடர்க்கெல்லாம் ஓர் அழகிய முன்மாதிரியாக வந்தவர்களாகும். இறை தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்த அவர்கள் அன்னவர்களுக்கெல்லாம் ஒரு முத்திரையாகத் திகழ்ந்தார்கள். எல்லாம் வல்ல இறைவன் மானுடர்க்கு வழிகாட்டியாய் அருளிய தீனுல் இஸ்லாம் என்னும் வாழ்க்கை வழியை பூரனம் செய்தவர்கள் எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களே!
பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தூய மார்க்கத்தினை நிறைவு செய்ததன் பின்னரே அதாவது இறை பனியை முடிவு செய்ததன் பின்னரே எல்லாம் வல்ல நாயன் இஸ்லாத்தை எமது மார்க்கமாக முடிவு செய்தான்.
முஹம்மதை படைக்கும் நோக்கம் இல்லா விடின் இந்த பிரபஞ்சங்களையே படைத்திருக்க மாட்டேன் என்று இறைவன் கூறுமளவிற்கு பெருமதி மிக்க எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது மறைவுக்குப் பின்னரும் நாம் வழிதவராமல் இருக்க அறிவுறுத்தல்களையும் அறிவுரைகளையும் அள்ளி வழங்கியுள்ளார்கள்.
எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் இந்த தொடரில் எமக்கு வழங்கிய அறிவுறுத்தல்களில் மிகப் பிரதானமானது ஹதீது தகலைன் எனப்படும் அறிவுறுத்தலாகும்.
ஹதீது தகலைன்
நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன.ஒன்று அல்லாஹ்வின் வேதம் இரண்டாவது எனது அஹ்லுல் பைத் (குடும்பம்). இவ்விரண்டையும் நீங்கள் கைக்கொள்ளும் வரை என்றுமே வழிதவர மாட்டீர்கள். (நிச்சயமாக)ஹவ்லுல் கவ்ஸரில் என்னிடம் வரும் வரை அவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மாட்டாது என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்போர் அலி அலைஹிஸ்ஸலாம் , இப்னு அப்பாஸ் (ரலி), அபூதர் கப்பாரி (ரலி), ஜாபிருள் அன்ஸாரி (ரலி), இப்னு உமர் (ரலி),ஹுதைபத் இப்னு அஸ்யத் (ரலி), ஸெய்யித் இப்னு அர்கம் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), அபூ ஐயூபல் அன்ஸாரி (ரலி), இப்னு தாபித் (ரலி), உம்மு சல்மா (ரலி), அபூ சயீத் அல் குத்ரி (ரலி) போன்றோர் பிரபல்யமான 33 அறிவிப்பாளர்கள்.
ஆதாரம்: ஸஹீஹுல் முஸ்லிம் அத்தியாயம்: 7 பக்கம். 127, முஸ்னத் அஹ்மத் அத்தியாயம்: 4 பக்கம். 366, பைஹகி அத்தியாயம்: 2 பக்கம்.148, தாரமி அத்தியாயம்: 2 பக்கம். 431, ஸஹீஹுல் திரிமிதி அத்தியாயம்: 2 பக்கம். 308, கன்ஸுல் உம்மால் அத்தியாயம்: 1 பக்கம். 45 மேலும் இப்னு கதிர் எனும் பிரபல்யமான தப்ஸீரின் 4ம் அத்தியாயத்தில் 113ம் பக்கத்திலும் இது பதியப்பட்டுள்ளது.
ஹதீது கலை நிபுனர்களின் முடிவின் படி இந்த ஹதீத் மிகப் பிரபல்யமான ஆதாரங்கள் நிரம்பிய முதவாத்திரான ஹதீதாகும்.
எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அருளியதாக ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்:
ஒரு நாள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மக்காவிற்கும் மதினாவிற்கும் இடையில் உள்ள கும் என்ற இடத்தில் வைத்து பிரசங்கம் நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பித்த அவர்கள்.
மக்களே அல்லாஹ்வுடைய தூதர் ஒருவர் என்னை அழத்து அதற்கு பதில் சொல்ல வேண்டியவனாக நான் இருக்கின்றேன். இந்நிலையில் நான் உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமாகும். அதில் நேர்வழியும் பிரகாசமும் உண்டு. அல்லாஹ்வின் வேதத்தைக் கைக்கொண்டு அதனை பின்பற்றி நடவுங்கள்..
என்று கூறியதுடன் அல்லாஹ்வின் வேதத்தை நாம் பின்பற்றி நடப்பதற்காய் எமக்கு ஆசையும் ஆர்வமும் ஊட்டினார்கள். தொடர்ந்து அவர்கள்..
இரண்டாவது விடயம் எனது அஹ்லுல் பைத் (குடும்பம்) ஆகும். எனது அஹ்லுல் பைத் விடயத்தில் நான் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகின்றேன் என்று மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறினார்கள். (ஸஹீஹுல் முஸ்லிம் அத்தியாயம்: 7: 122ம் பக்கம்)
இதே கருத்தை வலியுருத்தும் இன்னும் பல ஹதீதுகள் பல கிரந்தங்களில் உள்ளன. அவற்றை விரிவஞ்சி விடுகின்றோம்.
அண்ணலார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அருளிய இந்த ஹதீதுகள் முஸ்லிம்கள் மீது இரு பெருமதிமிக்க பின்பற்றி நடக்க வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றி குறிப்பிடுகின்றன. அவற்றை பின்பற்றி நடக்காவிடின் நாம் வழிதவரி நடக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் நபிகளார் முஹம்மதத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களால் விடுக்கப் கட்டுள்ளதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலும் பின்பற்ற வேண்டிய இரு முக்கிய விடயங்களில் அஹ்லுல் பைத்தும் ஒன்று என்பது இங்கு கோடுகாட்டப்பட்டுள்ளது.
முன்னைய அத்தியாயங்களில் அஹ்லுல் பைத்தினரின் தூய்மை பற்றி அறிந்து கொண்டோம். இங்கு அவர்களின் தராதாம்: தகுதி பற்றி அறிகின்றோம். பின்பற்ற வேண்டிய இரண்டு விடயங்களில் ஒன்று அல்குர்ஆன்.மற்றது அஹ்லுல் பைத் இது அண்ணலாரின் அருமைக் கட்டளையாகும்.
மேலும் ஹவ்லுல் கவ்ஸரில் என்னிடம் வரும் வரை அவை இரண்டும் ஒன்றை ஒன்று பிரிய மாட்டாது என்ற ஆணித்தரமான கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது அஹ்லுல் பைத்தினர் அச்சொட்டாக அல்குர்ஆனின் வழியே நடப்பவர்கள் என்பதே அதன் கருத்தாகும்.
அறிஞர் பெருமக்களின் முடிவுகளின் படி அண்ணலாரின் வாழ்வு அல்குர்ஆனாகவே இருந்தது. அவர்கள் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர்களை பின்பற்றி வாழ்தல் என்பது அல்குர்ஆனின் அதே வாழ்க்கையேயாகும். அதுபோல் அல்குர்ஆனையும் அண்ணல் நபிகளாரையும் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அச்சொட்டாக அடி தவறாமல் அஹ்லுல் பைத்தினர் பின்பற்றி நடந்தனர். அதனால் அஹ்லுல் பைத்தினரைப் பின்பற்றி நடத்தல் எம் மீது கடமையாகின்றது.
அஹ்லுல் பைத்தினரில் ஒவ்வொருவரும் அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி நேரடி கண்காணிப்பில் வளர்ந்தவரே. அண்ணலாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அரவணைப்பில், வழிகாட்டுதலிலே அவர்கள் வாழ்ந்தனர்.
அதனாலேயே எம் பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்குர்ஆன், அஹ்லுல் பைத் என்ற இரு விடயங்களையும் (தக்லைன்) பின்பற்றி நடக்குமாறு எமக்கு ஏவினார்கள்.
அஹ்லுல் பைத்தினர் ஒவ்வொருவரினதும் தாரதண்மியங்கள் பற்றி பிறிதொரு அத்தியாயத்தில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்!
கேள்வி கேட்பேன்
அல்குர்ஆன், அஹ்லுல் பைத் ஆகிய இரண்டு விடயங்களை பின்பற்றி நடக்குமாறு எம்மை ஏவிய அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அவற்றை நாம் பின்பற்றி நடந்தோமா என்பது பற்றி (மறுமையில்) கேள்வி கேட்கக் கூடியவர்களுமாய் இருப்பார்கள். இதிலிருந்து பின்பற்றி நடப்பது என்பது எவ்வளவு கட்டாயமானது என்பது தெளிவாகின்றது அல்லவா?
ஒரு முறை அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி நான் உங்களை விடவும் உயர்ந்தவன் தானே என வினவினார்கள். அதற்கு ஸஹாபாக்கள் அனைவருமே ஆம் எனப் பதிலலித்தார்கள். அப்போது நபியவர்கள் நான் உங்களிடம் இரண்டு விடயங்களையிட்டுக் (கேள்வி) கேட்கக் கூடியவனாக இருப்பேன். ஓன்று: அல்குர்ஆன், அடுத்து எனது அஹ்லுல் பைத் என்று கூறினார்கள். (ஆதாரம்: ஸுயுதி இமாம்: இஹ்யாவுல் மையித் 38ம் பக்கம்.)
முன்னர் குறிப்பிட்ட ஹதீதுகளில் அண்ணல் நபிகள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தக்லைன் இரண்டு விடயங்களை பின்பற்றி நடக்குமாறு தமது வாழ்வின் அந்திமப்பகுதியில் வஸியத் செய்திருந்ததை அறிந்தோம். அவை இரண்டினையும் நாம் சரியாக நபிகளாருக்குப் பின்னால் பின்பற்றி வாழ்ந்தோமா என்பதற்கு ஒரு பரீட்சை நடைபெரும் என்பதையே இந்த ஹதீத் குறிப்பிடுகின்றது எனலாம். இதிலிருந்து அந்த இரண்டு விடயங்களினதும் கனத்தினை நாம் அறியக்கூடியதாய் இருக்கின்றது.
அஹ்லுல் பைத்தினரின் முக்கியத்துவம் பற்றி பின்வரும் ஹதீத் எமது அவதானத்துக்குரியதாகும். அஹ்லுல் பைத் விடயத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறும் விடயங்களை அவதானித்துக் கொண்டிருங்கள். (அறிவிப்பாளர்: அபூபக்கர் இப்னு உமர், நூல்: புஹாரி பாகம் 5, 26ம் பக்கம்)
அஹலுல் பைத் சம்பந்தமான எமது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் குறிப்பிட்ட அனைத்து விடயங்களும் மிக முக்கியமானவையாகும். ஆது மட்டுமன்றி அவர்கள் மீது எமக்கு கடமையாக்கப்பட்டுள்ளவற்றை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும். இவற்றையே இந்த ஹதீத் வலியுருத்துகின்றது. இந்த விடயத்தில் பெரும்பாலான ஹதீஸ் நிபுணர்கள் ஒன்று பட்ட கருத்தையே தெரிவிக்கின்றனர்.
ஹதீது தக்லைன் என்ற ஹதீது சிற்சில மாற்றங்களுடன் பல ஹதீதுகள் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது. உதாரணமாக இமாம் அஹ்மது இப்னு ஹம்பலின் முஸ்னாத் (அத்தியாயம்:3 பக்கம்:17) திலும் இது பதியப்பட்டுள்ளது.
ஸபீனா: கப்பல்
எனக்கும் என்னுடைய அஹ்லுல் பைத்துக்குமான உதாரணம்: நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பலாகும்.எவர் அதில் ஏறிக் கொண்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றார். எவர் அதில் ஏறிக்கொள்ளவில்லையோ அவர் மூழ்கடிக்கப்படடு நஷ்டமடைந்தார். (அண்ணல் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி ஆதாரம்: முஸ்தத்ரகுல் ஹாகிம் 2ம் பாகம் 343ம் பக்கம் கனஸுல் உம்மால் 6ம் பாகம் 216ம் பக்கம்)
இமாம் முஸ்லிமின் நிபந்தனைகளின் படி இந்த ஹதீத் ஸஹீஹானது என்று இமாம் ஹாக்கிம் குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்த ஹதீத் அபூதர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் தபராணியிலும் பதியப்பட்டுள்ளது.
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் உத்தரவின் படி ஒரு கப்பலை அமைத்தார்கள். நிராகரிப்போரின் தொல்லைகளிலிருந்து தப்புவதற்காய் அல்லாஹ்வின் உத்தரவின் படி அமைக்கப்பட்ட அந்த கப்பலில் ஏறிய விசுவாசிகள் அந்தக் பெரு வெள்ளத்தில் இருந்தும் தப்பி ஈடேற்றம் பெற்றார்கள். அதில் ஏற மறுத்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறைபனியை நிராகரித்தோர் பெரு வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டார்கள்.
பெரு வெள்ளம் வரும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை நம்ப மருத்து அவர்கள் அமைத்த அந்தக் கப்பல் அப்படியான வெள்ளத்தில் தம்மைக் காப்பாற்றுமா என்று சந்தேகம் கொண்டு ஏளனம் செய்த நிராகரிப்போர் அல்லாஹ்வினால் மூழ்கடிக்கப்பட்டு அப்படியே நாசம் செய்யப்பட்டார்கள்.
அண்ணலார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தம் உம்மத்தாராகிய எம்மை நோக்கி பெருஞ் சேதம் விளைவிக்க வல்ல அந்தப் பெருவெள்ளத்தில்இருந்து தப்புவதற்கான ஒரு ஸபீனாவாக:கப்பலாக தமது அஹ்லுல் பைத்தினரை அறிமுகம் செய்துள்ளார்கள்.
இதன் மூலம் நாம் அஹ்லுல் பைத் எனப்படும் இந்த பாதுகாப்பளிக்கக் கூடிய ஸபீனாவின் சிறப்பை அறிந்து கொள்கின்றோம். இதில் ஏறி ஈடேற்றம் பெறுவோமாக!
பொறுப்புக்கள்: அமான்
நிச்சயமாக அல்லாஹ் மூன்று பொருப்புக்களை எம்மிடம் ஒப்படைத்துள்ளான். யார் அவற்றைப் பாதுகாக்கின்றார்களோ அவர்களின் தீன், துன்யா ஆகிய விடயங்களை அல்லாஹ் பாதுகாக்கின்றான்.அவ்வாறு பாதுகாக்காதவர்களின் எதனையும் அல்லாஹ் பாதுகாப்பதில்லை, அவையாவன:
1- இஸ்லாத்தின் கண்ணியம்
2- எனது கண்ணியம்
3- எனது குடல்வாய் சனங்களின் கண்ணியம். என அண்ணலார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: தபராணி, இப்னு ஹஜர்: அஸ்ஸவாயிக் அல் முஹ்ரிகா 90ம் பக்கம்)
ஒரு முஸ்லிம் இஸ்லாத்தினதும் இறைத்தூதரினதும் கண்ணியத்தைக் காப்பது கடமையாகும். ஏனெனில் அவனது ஈருலோக ஈடேற்றத்தை இஸ்லாம் உறுதி செய்கின்றது. அத்துடன் இஸ்லாத்தை அவனுக்கு வழங்கியவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களேயாகும்.
இங்கு இறைவேதம் இறைத்தூதர் என்பவற்றுடன் இறை தூதரின் குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டு மூன்று பொருப்புக்கள் எமமீது பொறுப்புச் சாட்டப்hட்டுள்ளன. இப்பொறுப்புக்களைப் பேண்ப் பாதுகாக்க வல்ல இறைவன் எமக்கு அருள் பாலிப்பானாக!
ஒழுக்கப் பயிற்சிகள்
மூன்று விடயங்களில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கப் பயிற்சி அளியுங்கள்:
1- நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் மீது அன்பு வைத்தல்
2- அஹ்லுல் பைத் மீது அன்பு வைத்தல்
3- பரிசுத்த குர்ஆன் ஓதுவித்தல்
நிச்சயமாக குர்ஆனை சுமந்தவன் எந்த நிலலுமே அற்ற அந்த நாளில் நபிமார்களுடனும், தூய்மையாளர்களுடனும் அல்லாஹ்வின் நிழலில் இருப்பான்.என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஸுயூதி: இஹ்யாவுல் மையித் 40ம் பக்கம், இப்னு ஹஜர்: ஸவாயிக் 103ம் பக்கம்)
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி மீது அன்பு லைத்தலும் குர்ஆனை ஓதுதலும் எம் அனைவர் மீதும் கடமையாக உள்ளது. அது போல் அஹ்லுல் பைத்தினர் மீது அன்பு வைத்தல் கடமையாகின்றது. இவற்றில் நாம் ஒட்டி இருப்பதுடன் எமது பிள்ளைகளுக்கும் இப்பயிற்சிகளை வழங்கி அல்லாஹ்வினதும் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினதும் திருப் பொருத்தத்தைப் பெருவோமாக.
உடலுக்கு தலை: தலைக்குக் கண்கள்
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் அஹ்லுல் பைத் உடலுக்குத் தலையாகவும் தலைக்கு கண்களாகவும் வைத்துக் கொள்ளுங்கள. ஏனெனில் நிச்சயமாக தலையின்றி உடலும் கண்களின்றி தலையும் நேர் வழி பெறாது. (ஆதாரம்: தபராணி)

எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்
சிரசின் வழிகாட்டி இரு விழிகள்
ஆம் நல்லோர் வாக்குகள் இவை. இதே உதாரணத்தை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அஹ்லுல் பைத்தின் ஸ்தானம் பற்றிய விளக்கமாக கையாண்டுள்ளதை நாம் காண்கின்றோம். ஆக: உடலுக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு கண்களாகும். அதுபோல் எம் வாழ்விற்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் அஹ்லுல் பைத்தினர் இருக்கின்றனர். அவர்களைப் பின்பற்றி விமோசனம் பெறுவோமாக.
துருவ நட்சத்திரம்
வானுலகில் வழி (திசை) காட்டியாய் நட்சத்திரம் இருப்பது போல் பூவுலகில் வழிகாட்டியாய் எனது அஹ்லுல் பைத் இருக்கின்றது. என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறிளார்கள். (அறிவிப்பாளர்;: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: தபராணி)
இமாம் அஹமத் இப்னு ஹம்பல் (ரலி) தனது மனாகிப் என்ற நூலிலும் இந்த கருத்துடைய ஹதீதைப் பதிவு செய்துள்ளார்.
திக்குத் தெரியாத காட்டில்:ஆழிக் கடலில்:முன் பின் தெரியாத நிலப்பரப்பில் மனிதரின் வழிகாட்டியாய் துருவ நட்சத்திரங்கள் உள்ளன. அது போலவே நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் புண்ணிய குடும்பமான அஹ்லுல் பைத் எமது வழிகாட்டியாய் உள்ளது. அல்குர்ஆனினதும் அஹ்லுல் பைத்தினதும் வழிகாட்டுதலுடன் ஈருலகிலும் ஈடேற்றம் பெற முயல்வோமாக!