வியாழன், 26 ஜனவரி, 2012

இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) – ஓர் அறிமுகம்

இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) – ஓர் அறிமுகம்
இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் ஷீஆக்களின் ஆறாவது இமாமும் எட்டாவது பரிசுத்தவானுமாவார்கள்.
அவர்களின் இயற்பெயர் : ஜஃபர்
அவர்களின் புனைப்பெயர் : அதிகமாக மக்கள் மத்தியில் அவர்களுக்கு புனைப் பெயராக அழைக்கப்பட்ட பெயர் அபூ அப்தில்லாஹ் என்பதாகும். இது தவிர, அபூ இஸ்மாயில், அபூ மூஸா போன்ற பெயர்களினாலும் அழைக்கப்பட்டார்கள்.
மேலும், ஸாதிக், பாழில், தாஹிர், ஸாபிர் போன்ற சிறப்புப் பெயர்களினாலும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இமாமவர்களுக்கு ஸாதிக் (உண்மையாளர்) என்ற பெயர் இடப்பட்டமைக்கான காரணம் ஜஃபர் கத்தாபிற்கும் (பொய்யன்) அவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்பதற்காகவே.
ஷெய்க் சதூக் அவர்கள் தமது அறிவிப்பில் குறிப்பிடுவதாவது, இமாம் ஹுஸைன் (அலை) அவர்களிடம் இருந்து இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்கள் தமது பாட்டனார் நபிகளார் (ஸல்) அவர்களின் ஹதீஸொன்றை பின்வருமாறு அறிவிக்கிறார்கள்: 'என்னுடைய மகன் ஜஃபர் இப்னு முஹம்மத் இப்னு அலீ இப்னுல் ஹுஸைன் இப்னு அலி இப்து அபீ தாலிப் பிறந்தால் அவருக்கு சாதிக் என்று பெயரிடப்படும். காரணம் அவரின்; பரம்பரையில் ஜஃபர் என்ற பெயருடைய மற்றொருவர் தன்னை இமாமெனப் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பார். அவருக்கு கத்தாப் என்று பெயரிடப்படும்'.
அவர்களது தந்தையின் பெயர்: முஹம்மத் இப்னு அலீ இமாம் பாக்கிர் (அலை) ஆவார்கள்.
தாயாரின் பெயர் : உம்மு பர்வஃ ஆவார். அவர் காசிம் இப்னு மஹம்மத் இப்னு அபீ பக்கர் அவர்களின் புதல்வியாவார். இவரின் பெயர் பாத்திமா அவரின் புனைப் பெயர் உம்மு பர்வஃ ஆகும்.
பிறப்பு: இமாமவர்கள் ஹிஜ்ரி 83ம் வருடம் ரபீஉல் அவ்வல் 17ல் பிறந்ததாக, முதலாவது ஸஹீத் தனது பாடங்களிலும், கப்அமீ தனது மிஸ்பாஹிலும், தப்ரஸீ தனது இஃலாமுல் வராயிலிலும், பதால் தனது றவ்ழதுல் வாஇதீனிலிலும், ஷஹ்ர் ஆசூப் மனாகிபிலும் பதிவு செய்துள்ளனர். இமாம் ஜஃபர் ஸாதிக் (அலை) அவர்கள் நபிகளார் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்த அதே தினத்திலேயே இமாமவர்களும் பிறந்துள்ளார்கள்.
மரணம்: ஹிஜ்ரி 148 ஷவ்வால் 25ல் இமாமவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் என குலைனி, முதலாவது ஷஹீத், முபீத் முதலானோர் தெளிவுபடுத்தியுள்ளனார். இமாமவர்களின் மரணம் ஷவ்வால் மாதத்தின் 25ம் நாளிலேயே இடம்பெற்றது என மற்றும் பல வரலாற்றாசிரியர்களும் தெரிவித்துள்ளனர். கப்அமீ மற்றும் தபர்ஸீ போன்றோர் ரஜப் மாதத்தின் அரைப் பகுதியில் இமாமவர்கள் மரணித்ததாகக் கூறியுள்ளனர்.
கலீபா மன்சூரினால் நஞ்சூட்டப்பட்டு இமாமவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள் என்பதாக மிஸ்பாஹில் கப்அமீ மற்றும் மனாகிப் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்ந்த காலம்: 65 வருடங்கள்.
நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்: மதீனாவின் பகீ என்ற மையவாடியில் மூன்று இமாம்களுக்கு அருகில், இமாம் அலீ (அலை) அவர்களின் தாயார் ஹஸ்ரத் பாத்திமா பின்து அசத் அவர்களின் அடக்கஸ்தலத்திற்கு அருகாமையில் அவர்களது அடக்கஸ்தலம் உள்ளது.
இமாமத்தின் காலம்: 34 வருடங்கள்.
சமகால மன்னர்கள்: ஹிஷாம் இப்னு அப்துல் முல்க், வலீத் இப்னு யசீத் இப்னு அப்துல் மலிக், யசீத் இப்னு வலீத் இப்னு அப்தில் மலிக் - நாகிஸ் என்ற புணைப் பெயரைக் கொணடவர், இப்றாஹீம் இப்னுல் வலீத், மர்வான் ஹம்மார், அபுல் அப்பாஸ் சப்பாஹ், மன்சூர் அப்பாஸ் ஆகியோர் இமாமவர்களது காலத்தில் ஆட்சியாளர்களாக இருந்தோராவர். கலீபா மன்சூரின் ஆட்சியின் 10ம் ஆண்டில் இமாமவர்கள் மரணம் அடைந்தார்கள்.
பிள்ளைகள்: இமாமவர்களுக்கு 10 பிள்ளைகள் இருந்ததாக ஷைக் முபீத் கூறியுள்ளார்: இஸ்மாயீல், அப்துல்லாஹ், உம்மு பர்வஃ (இவரின் தாயார் பாத்திமா பின்துல் ஹுஸைன் அவர்கள் இமாம் ஸஜ்ஜாத் (அலை) அவர்களின் பேரப் பிள்ளைகளுள் ஒருவராவார்), மூஸா அல்காழிம் (அலை), அஸ்கக், முஹம்மத் (இவரின் தாய் உம்மு வலத் ஆவார்), அப்பாஸ், அலீ, அஸ்மாஉ, பாத்திமா (அதிகமானவர்களின் தாய்), இஸ்மாயீல் அவர்களே இமாமவர்களின் பிள்ளைகளில் மூத்தவராவார். ஆதலால் இவரே இமாம் என பலரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இவேரா தமது தந்தையின் காலத்திலேயே மரணித்துவிட்டார்.
இமாமவர்களின் சிறப்புகள்:
1. அபூ பஸ்ரா கூறுகிறார் : நான் மதீனாவை சென்றடைந்த பின் எனது அடிமைப் பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டுவிட்டு குளிப்பை நிறைவேற்றுவதற்காக குளியல் அறையை நோக்கிச் செல்கையில் என்னுடைய தோழர்கள் இமாம் ஜஃபர் சாதிக் (அலை) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். இதைத் தவறவிட்டால் இமாமவர்களைச் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்காது போய் விடும் என்றெண்ணிய நான், குளிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, அதே நிலையில், இமாமவர்களைச் சந்திப்பதற்காக எனது நண்பர்களுடன் இணைந்து கொண்டேன்.
அவ்வேளையில், இமாமவர்கள் என்னைப் பார்த்து, 'யா அபாபஸீர்! மனிதர்கள் தாம் குளிப்புக் கடமையாக இருக்கும் போது நபிமார்களினதும் இறைநேசர்களினதும் வீட்டிற்குள் நுழைவதில்லை என்பது உங்களுக்கு தெரியாதா!' எனக் கேட்டார்கள். நான் வெட்கத்திற்குள்ளாகி இமாமவர்களைப் பார்த்து கூறினேன்: 'நபிகளாரின் புதல்வரே! எனது தோழர்கள் தங்களைச் சந்திக்க வருவதைக் கண்டேன். இச்சந்தர்ப்பத்தைத் தவற விட்டால், இனி தங்களைச் சந்திக்கக் கிடைக்காது என்பதனாலேயே இந்நிலையிலும் வந்து விட்டேன். இனிமேல் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டேன்'.
அப்போது இமாம் அவர்கள், 'மூஸாவின் தவ்ராத் பட்டோலை எங்களிடம் இருக்கின்றது, மூஸாவின் ஊன்றுகோல் எங்களிடம் இருக்கின்றது, நாங்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருக்கின்றோம்' என்று கூறினார்கள்.
2. அப்பாஸிய கலீபா மன்சூர், தனது பணியாளர்களில் ஒருவரான ரபீஐ அனுப்பி, இமாம் ஸாதிக் (அலை) அவர்களை தனது தர்பாரிற்கு அழைப்பு விணடத்தான். இமாமவர்கள் மன்சூரின் இருப்பிடத்தை வந்தடைந்ததும், மன்சூர் பெரும் சினத்துடன் இமாமவர்களை நோக்கி, 'நான் உம்மைக் கொல்லாது விட்டால் இறைவன் என்னைக் கொல்லட்டும், எனது ஆட்சியை எதிர்த்து எனக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முயற்சி செய்கிறீரோ?' எனக் கேட்டான்.
இமாமவர்கள் கூறினார்கள்: 'இறைவன் மீது ஆணையாக, நான் இவ்வாறான ஒரு வேலையை செய்யவில்லை, இவ்வாறான ஒரு தகவல் சொல்லப்பட்டிருந்தால் அது பொய்யாகும், சொன்னவர் ஒரு பொய்யராவார்:
மன்சூரின் கோபம் சற்றுத் தணிந்தது. அவன், இமாமவர்களை தன்னிடம் அழைத்து, 'இன்னாரின் மகன் இன்னார் இந்த செய்தியை எனக்கு சொன்னார்' என்று கூறினான். அவரை எனக்கு முன்னால் வரவழையுங்கள் என இமாமவர்கள் கூறினார்கள்.
குறித்த நபர் அழைக்கப்பட்டார். அவரை நோக்கிய மன்சூர், 'நீ ஜஃபர் இப்னு முஹம்மத் பற்றி அவ்வாறு கூறப்பட்டதை செவிமடுத்தாயா?' எனக் கேட்டார். அதற்கவர் 'ஆம்' என்றார். இமாமவர்கள், மன்சூரை நோக்கி, 'அவ்வாறெனில் சத்தியம் செய்யச் சொல்லுங்கள்' என்றார்கள். 'சத்தியம் செய்வீரா?' என மன்சூர் கேட்க, அம்மனிதர் 'ஆம்' என்றார். அவர் சத்தியம் செய்யத் தயாரான போது, இமாமவர்கள் அம்மனிதரை நோக்கி, 'சத்தியம் செய்வதெனில், இவ்வாறு கூறும்: 'நான் இறைவனின் சக்தியை விட்டும் தூரப்பட்டு, என் சக்தியின் மீது சத்தியம் செய்கின்றேன்'. அம்மனிதன் இதைச் சொல்லுவதற்குச் சற்று தயங்கினான். பின் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவ்வாறு சத்தியம் செய்தான். அடுத்த நொடியே, அவன் தரையில் விழுந்து தனது கைகால்களை உதறிக் கொண்டு மரணித்துப் போனான்.
இமாம் ஸாதிக் (அலை) அவர்கள் கூறினார்கள்: 'அவனின் காலில் பிடித்து இழுத்துச் சென்று அவனது உடலை வெளியே கொண்டு சென்று வீசுங்கள் இறைவன் அவனை தூஷிக்கட்டும்'.
3. மதீனாவின் ஆட்சியாளராக இருந்த தாவூத் இப்னு அலி இப்னு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் என்பவன், இமாமவர்களின் பிரதிநிதியான முஅல்லீ இப்னு குனைஸைக் கொலை செய்து விட்டு, அம்மனிதரிடமிருந்த இமாமவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டான். அதையறிந்த இமாமவர்கள் தாவூதின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த தாவூதைப் பார்த்துக் கூறினார்கள்: 'என்னுடைய பிரதிநிதியைக் கொன்று விட்டு அவரிடமிருந்த என்னுடைய சொத்துகளையும் அபகரித்துக் கொண்டாயா? அநீதி இழைக்கப்பட்டவனின் சாபம் மனிதனை அழித்துவிடுமென்று உனக்குத் தெரியாதா? இறைவன் மீது ஆணையாக உன் மீது அழிவு உண்டாகட்டும்'.
'என்னை உமது துஆவைக் கொண்டு பயமுறுத்துகிறீரா?' என பதிலுக்கு தாவூதும் உரத்த குரலில் கூறி, இமாமவர்களை அனுப்பி விட்டான். இமாமவர்கள் தமது இல்லத்திற்குத் திரும்பி வந்து விட்டார்கள். அன்றைய இரவு முழுவதும் இறைவனை வணங்குவதில் கழித்தார்கள். பிரார்த்தனையும் புரிந்தார்கள்.
அதிக நேரம் செல்லவில்லை. தாவூதின் வீட்டிலிருந்து அழுகை ஓசை கேட்டது. தாவூதின் மரணச் செய்தி கொண்டுவரப்பட்டது.
4. அபூபஸீர் கூறுகிறார்: 'எனக்கு ஓர் அண்டை வீட்டுக்காரர் இருந்தார். அவர் கலீபாவை பின்பற்றக் கூடியவராக இருந்தார், தனது சொத்திலிருந்து ஒரு பகுதியை செலவிட்டு, பாடலிசைக்கக் கூடிய வேலைக்காரப் பெண்களை விலைக்கு வாங்கினார். மக்கள் அவரின் வீட்டில் ஒன்று சேர்ந்தார்கள், மதுபானம் அருந்தினார்கள், கூச்சலிட்டார்கள், நான் மிகவும் கஷ்டத்திற்குள்ளானேன். இது பற்றிப் பல தடவைகள் அவ்வீட்டுக்காரருக்கு எடுத்துக் கூறியும் அவர் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
ஒரு நாள் இது பற்றி மிகவும் கண்டிப்பாக அவருக்கு கூறினேன். அப்போது அவர் என்னைப் பார்த்துக் கூறினான்: 'நான் மிகவும் கஷ்டத்திற்குள்ளானவனாக இருக்கின்றேன். நீங்களோ நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள். என்னுடைய நிலைமையைப் பற்றி உங்களது தலைவரிடம் (இமாம் ஸாதிக் (அலை) அவர்களிடம்) எடுத்துக் கூறுவீராக. சிலவேளை இறைவன் அவரின் பொருட்டினால் என்னை விடுதலையாக்கட்டும்'.
அம்மனிதனின் பேச்சு என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. உடனே நான் இமாமவர்களிடம் சென்று இவ்விடயம் பற்றி அவர்களிடம் கூறினேன்.
இமாம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் கூபாவுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அவர் உங்களைச் சந்திக்க வருவார். அவருக்கு நீங்கள் சொல்லுங்கள்: 'நீங்கள் செய்கின்ற அந்தச் செயலைச் செய்யாது தவிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய சுவனத்திற்கு நான் பொறுப்பாக இருக்கிறேன்' என ஜஃபர் இப்னு முஹம்மத் சொன்னார் எனக் கூறுங்கள்' என்றார்கள்.
நான் கூபாவுக்கு வந்தவுடன் என்னைப் பார்ப்பதற்காக அந்தத் தோழர் வந்தார். அவரு;குச் சொன்னேன்: 'உங்களுடைய சம்பவத்தை இமாமவர்களிடம் சொன்னேன். இமாமவர்கள் உங்களிடம் இவ்வாறு சொல்லச் சொன்னார்கள்: 'உன்னுடைய வேலையில் இருந்து தூரப்படு, நான் உன்னுடைய சுவர்க்கத்திற்கு பொறுப்புதாரியாக இருக்கின்றேன்'.
இந்த செய்தியைச் செவிமடுத்தவுடன் அவர் அழத் தொடங்கி விட்டார். பின் அவர் என்னைப் பார்த்து, 'இறைவன் மீது ஆணையாக, இமாமவர்கள் இவ்வாறா கூறினார்கள்?' எனக் கேட்டார். நானும் 'சத்தியமாக இவ்வாNறு கூறினார்கள்' என்றேன். அப்போது அவர் என்னைப் பார்த்து: 'போதும்' என்று கூறிவிட்டுப் போய்விட்டார், சில நாட்களின் பின்னர் என்னை வருமாறு அழைத்தார். அவரது வீட்டுக்கு சென்றேன். வீட்டின் கதவுக்குப் பின்னால், எவ்வித ஆடையுமின்றி நின்று கொண்டு அவர் கூறினார்:
'இறைவன் மீது ஆணையாக, வீட்டில் எதுவெல்லாம் இருந்ததோ அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இப்போது உடுப்பதற்கு உடையுமில்லாதிருக்கின்றேன்'.
கவலையுற்ற நான், முஃமின்களிடமிருந்து சில உடைகளைச் சேகரித்து எடுத்து வந்து அவருக்குக் கொடுத்தேன்.
சில நாட்களின் பின், 'நான் நோயுற்றிருக்கிறேன் என்னைப் பார்க்க வாருங்கள்' என்று அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ச்சியாக அவரைப் பார்த்து சுகம் விசாரிப்பதற்காகச் சென்றேன். அப்போது அவரை மரணம் தழுவிக் கொண்டது. அவர் மரணிக்கும் போது நான் அவரிடம் இருந்தேன். அப்போது அவர் மயக்கமுற்று பின் சற்று நேரத்தின் பின் எழுந்து என்னிடம்: 'அபா பஸீரே! இமாம் சாதிக் (அலை) அவர்கள் எனக்குத் தந்த வாக்கின் பிரகாரம் வாக்கை நிறைவேற்றிவிட்டார்கள்' என்று கூறியவாறு மரணமடைந்தார். இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.
நான் ஹஜ்ஜுடைய காலத்தில் இமாம் சாதிக் (அலை) அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். அனுமதி பெற்று உள்ளே நுழையும் போது, இமாமவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார்கள்: 'அபா பஸீரே! நாங்கள் தந்த வாக்குறுதி போன்று உங்களது நண்பரின் விடயத்தில் நடந்து கொண்டோம்!' என்றார்கள்.
5. ஹன்னான் இப்னு சதீர் கூறுகிறார்: 'என்னுடைய தந்தை சதீர் செய்ரபீ இவ்வாறு கூறியதை நான் செவியுற்றுள்ளேன்: 'நான் நபிகளார் (ஸல்) அவர்களை கனவில் கண்டேன். அவர்களுக்கு முன்னால் ஒரு தட்டம் இருந்தது. அது புடவையால் மூடப்பட்டிருந்தது. அப்போது நான் நபிகளாரின் அருகில் சென்று ஸலாம் சொன்னேன். அவர்களும் பதிலளித்தார்கள். அந்நேரத்தில் அத்தட்டத்தின் மேலிருந்த புடவையை இமாமவர்கள் எடுத்தார்கள். பின் அதிலிருந்த பேரீத்தம் பழங்களை எடுத்து உண்ண ஆரம்பித்தார்கள். நான் முன்னே சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் அந்த ஈத்தம் பழங்களில் சில தாருங்கள்' என்று கேட்ட போது அவர்கள் அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்துத் தந்தார்கள்: அல்லாஹ்வின் தூதரே! இன்னுமொன்று தாருங்கள் என்றேன் என மீண்டும் நான் கேட்ட போதும் அவர்கள் தந்தார்கள். அதனையும் உண்டேன். இவ்வாறாக எட்டு பேரீத்தம் பழங்களை உண்டேன். அதன்பின்னும் ஒன்று கேட்டேன் . நபிகளார் ( ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வஸல்லம் ) போதும் என்றார்கள் .
அந்த நேரத்தில் தூக்கத்திலிருந்து எழுந்தேன் அந்த சம்பவம் நடந்து அடுத்த நாள் இமாம் சாதிக் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பார்ப்பதற்காகச் சென்றேன். ஹஸ்ரத் அவர்களிற்கு முன்னால் ஒரு தட்டம் வைக்கப்பட்டிருந்தது நான் கனவில் கண்டது போன்றே அது இருந்தது.
இமாம் அவர்களுக்கு முன்னால் சென்று ஸலாம் கூறினேன். ஸலாத்திற்கு பதிலளித்தார்கள். அந்நேரத்தில் இமாமவர்கள் அத்தட்டத்தின் மீதிருந்த புடவையை எடுத்தார்கள். அதனுள் புதிய பேரீத்தம் பழங்கள் இருந்தன. இமாமவர்கள் அதிலிருந்து எடுத்து உண்ண ஆரம்பித்தார்கள், ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்து, 'எனக்கும் அந்த ஈத்தம் பழத்தில் தாருங்கள்' என்று கேட்டேன். ஒன்று தந்தார்கள். உண்டேன் பின்னும் ஒன்று கேட்டேன். இவ்வாறாக எட்டு பேரீத்தம் பழங்கள் வரையும் உண்டேன் பின் 'நபிகளாரின் மகனே! இன்னும் ஒன்று தாருங்கள்' என்றேன்.
அப்போது இமாம் அவர்கள்: 'எங்களுடைய முப்பாட்டனார் நபிகளார் (ஸல்) அவர்கள் இதை விட அதிகமாகத் தந்திருந்தால் நாங்களும் தந்திருப்போம்' என்றார்கள். அவ்வேளையில் நான் கண்ட கனவை இமாமவர்களிடம் கூறினேன். அப்போது இமாமவர்கள், தமக்கு ஏற்கனவே இச்சம்பவம் தெரிந்தவரைப் போன்று புன்முறுவல் செய்தார்கள்.



(இது தொடரும்)